சர்வ குழு மாநாடொன்றை அவரசமாக கூட்டுமாறு முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி, பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

சர்வ குழு மாநாடொன்றை அவரசமாக கூட்டுமாறு முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி, பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

(எம்.மனோசித்ரா) 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் உள்ளிட்டோரின் நிலைப்பாடுகளை அறிந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு சர்வ குழு மாநாடொன்றைக் கூட்டுமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கும் கரு ஜயசூரிய, காலந்தாழ்த்தாமல் இம்மாநாட்டைக் கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நாளாந்தம் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பாரிய ஆபத்தாகும். 

இந்த சந்தர்ப்பத்தில் சுகாதாரப் பிரிவு, முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய துறையில் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு நாட்டு பிரஜைகள் அனைவரும் கௌரவத்தையும், நன்றியையும் தெரிவிக்க வேண்டும். 

இவ்வாறு சகல துறைகளிலும் சேவையாற்றும் அதிகாரிகளை முகாமைத்துவம் செய்யும் அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் மறுப்பின்றி ஆதரவை தெரிவிக்க வேண்டியது அனைவரினதும் தவிர்க்க முடியாத கடமையாகும். 

விசேடமாக இராணுவத்தினர் வறுமை நிலையிலுள்ள மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குச் சென்று அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குகின்றமை பொறுப்பானதும் அத்தியாவசியமானதுமான சேவையாகும். 

இவ்வாறு தேசிய ரீதியிலான அழிவொன்று ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் பொதுமக்களுக்கான போராட்டத்தில் அரசு ஈடுபட்டுள்ளமை முக்கியமானதொரு விடயமாகும். 

இந்நிலையில் முன்னாள் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள், வர்த்தக சபை மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளதைப் போன்று அனைவரதும் கருத்துக்களை கேட்டறிந்து தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பதற்கு சகல தரப்பு மாநாடொன்றை தாமதமின்றி கூட்டுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடமும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமும் முன்னாள் சபாநாயகர் என்ற வகையில் கோரிக்கை விடுக்கின்றேன். 

இந்த மாநாட்டின் போது குறிப்பிட்டதொரு தரப்பினரை மாத்திரம் இணைத்துக் கொள்வதோடு சுகாதார நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது சிறப்பானதாகும் என்பதும் எனது அபிப்பிராயமாகும். 

இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகளின் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் இணைந்து செயற்படுகின்றமையை கவனத்தில் எடுத்து இதற்கான தீர்வினைக் காண வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment