கொரோனாவை எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றார்கள் - சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

கொரோனாவை எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றார்கள் - சுசில் பிரேமஜயந்த

(இராஜதுரை ஹஷான்) 

கொரோனா வைரஸ் தாக்கத்தினை எதிர்த்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். பொதுத் தேர்தலுக்கு திகதி மாத்திரமே ஜனாதிபதி குறித்தொதுக்கினார். ஏப்ரல் 25 தேர்தலை நடத்த வேண்டும் என்று எந்நிலையிலும் அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை. மக்களின் நலனை கருத்திற்கொண்டு தேர்தல் ஆணையாளர் எடுத்த தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக் கொணடுள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

நடப்பு அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் விவகாரத்தை எதிர்க் கட்சியினர் தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றார்கள். உணவு பொருட்கள், மருந்துகள் களஞ்சியப்படுத்தலில் பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க் கட்சியினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள். 

ஒரு மாத்திற்கு தேவையான உணவு மற்றும் மருந்துகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். 

பாராளுன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்தொதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு இதன் பிரகாரம ஜனாதிபதி கடந்த 2 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த திகதி குறித்தொதுக்கினார். 

ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்த வேண்டும். என்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் எந்நிலையிலும் அழுத்தம் பிரயோகிக்கிவில்லை. 

தேர்தலை நடத்தும் திகதியை மாற்றியமைக்கும் அதிகாரம் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார். மக்களின் நலனை கருத்திற் கொண்டு தேர்தல் ஆணையாளர் தேர்தலை பிற்போட எடுத்த தீர்மானத்தை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பு மனுக்களை வெற்றிகரமாக கையளித்துள்ளது. மாநாயக்க தேரர்கள் மற்றும் மக்களின் அறிவுறுத்தலுக்கு முன்னுரிமை வழங்கி பலருக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்படவில்லை. தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் வரையில் எமது தேர்தல் பிரச்சாரங்களை பொதுமக்களை கூட்டாத விதத்தில் முன்னெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment