யுத்த காலத்தில் எப்படி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தார்களோ அப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது - தமிழ் மக்கள் மீது அடக்கு முறையை மேற்கொள்ளுவது ஏற்புடையதாக இருக்காது - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

யுத்த காலத்தில் எப்படி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தார்களோ அப்படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது - தமிழ் மக்கள் மீது அடக்கு முறையை மேற்கொள்ளுவது ஏற்புடையதாக இருக்காது

இனவாதத்தைத் தூண்டும் வகையில் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரை வைத்து தமிழ் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக ரெலோ கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பிரதேசங்களில் யுத்த காலத்தில் எப்படி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தார்களோ அப்படியான ஒரு சூழ்நிலை தற்போது படிப்படியாக ஏற்பட்டு வரும் சூழ்நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னாரில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “தற்போது தமிழ் பிரதேசங்களில் இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அதிகம் காணப்படுகின்றன. மக்களை ஏற்றி இறக்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வயோதிபர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார் என்று பார்க்காது வெயிலில் இறக்கி நடந்துசெல்ல வைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. சோதனை என்கின்ற வகையில் மக்களை துன்பத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

வடக்கு கிழக்கில் மாத்திரமே இந்த சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அதற்கான கண்டனத்தை நாங்கள் தெரிவித்துள்ளோம். தற்போது கிராமம் கிராமமாக சுற்றிவளைப்புச் சோதனைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

போர்க் காலங்களில் எங்களுடைய மீனவர்கள் தொழிலுக்குச் செல்லமுடியாத நிலையில் இடைமறிக்கப்பட்டு சோதனை நிகழ்ந்த காலம் இருந்தது. குறித்த நடவடிக்கைகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக மூன்றாம் பிட்டி, தேவன் பிட்டி கிராமங்களில் நேற்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவங்களுக்கு எனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு சிங்கள மக்கள் வாக்களித்தார்கள் என்ற ரீதியில் 3 இல் 2 பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறையை மேற்கொள்வது ஏற்புடையதாக இருக்காது.

சிங்கள மக்களைப் பொறுத்தவகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமது வாக்குகளை ஒன்றாகப் போட்டார்கள். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நிச்சயமாக தற்போது உள்ளவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

இனவாதத்தைத் தூண்டுகின்ற வகையிலே வடக்கு கிழக்கில் எங்களுடைய மக்களை துன்பப்படுத்துவதனூடாக சிங்கள மக்களுடைய வாக்குகளைக் கூடுதலாக பெற்றுக்கொள்ள முடியும் என்கின்ற திட்டம் இருக்கின்றது.

இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் இவ்வாறு செயற்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். குறித்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment