ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயராகவுள்ளதாக அவர் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.
சஜித் அணியினரது கோரிக்கைக்கு இணங்கவே புதிய பொதுச் செயலாளர் ஒருவரை நியமிக்க இடமளிக்கும் வகையில் தான் தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவில் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் சஜித் அணியினர் எவரும் கலந்துகொள்ளவில்லை. செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியை பிளவுப்படுத்தாமல் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்பதே பிரதான நோக்கமாகும். அதற்கு எமது பொதுச்செயலாளர் பதவி ஒரு தடையாக காணப்படுமாயின் பதவி விலக தயார்.
கட்சியின் நலனுக்கான அனைவரும் ஒரு சில விடயங்களில் விட்டுக் கொடுத்து இணக்கப்பாடுடன் செயற்படுவது அவசியமாகும்.
ஐக்கிய தேசிய கட்சியை பிளவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எவருக்கும் கிடையாது. கட்சியை பலப்படுத்தி பேச்சுவார்த்தைகளின் ஊடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீரவு காணப்பட வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அனைவரும் ஒன்றினைவதற்கு நான் வகிக்கும் பொதுச்செயலாளர் பதவி ஒரு தடையாக காணப்படுமாயின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு தயாராக உள்ளேன். இந்த தீர்மானத்தை கட்சியின் தலைவருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment