(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் பாரியளவில் தாக்கம் செலுத்தவில்லை என்ற போதிலும், பெருந்தோட்ட மக்களுக்கு முகக் கவசங்கள் போன்றவற்றை வழங்கி முன்னாயத்தங்களுடன் அவர்களை தொழிலுக்குச் செல்லுமாறு அனுமதித்திருக்கலாம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வேலுச்சாமி இராதாகிருஸ்னண் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இன்றுமுதல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலில் ஈடுபடுபவர்கள் தொழிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாரியளவில் தாக்கம் செலுத்தவில்லை. இந்நிலையிலேயே பெருந்தோட்ட மக்கள் தொழிலுக்குச் செல்ல முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாளாந்த சம்பளத்திற்கு தொழிலில் ஈடுபடும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் நோக்கும் போது இந்த தீர்மானம் நன்மையானது என்று கருதலாம்.
எனினும் வாழ்வாதாரத்தை விடவும் உயிர் முக்கியமானது. எனவே இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் ஏனைய சமூகத்தினருக்கு வழங்கப்படுவதைப் போன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசாங்கத்தால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அது மாத்திரமின்றி முகக் கவசங்கள் மற்றும் அடிக்கடி கைகளை கழுவதற்கான வசதிகள் என்பனவும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பெருந்தோட்ட உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு தொழிலாளர்களும் 1 மீற்றர் இடைவெளியைக் கடைபிடிப்பதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment