இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இந்தியாவும் சர்வதேச நாடுகளும்தான் உணர வேண்டும் அவர்களுக்கே அந்தப் பொறுப்பு உள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களையே தெரிவித்து வருவது தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயங்களை மேற்கொண்டு திரும்பியுள்ளனர். இவர்கள் இந்தியாவுடன் பேசியது ஒரு விடையம் ஆனால் வெளியில் வந்து பேசியது இன்னெருவிடையம். குறிப்பாக இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இல்லை என்ற விதத்திலேயே அவர்களுடைய கருத்துக்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவிற்கு மட்டுமன்றி ராஜதந்திரிகள் ரீதியிலான சந்திப்புக்கள் ஒன்று நடைபெற்றாலும் அல்லது ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெற்றாலும் பல கருத்துக்களைக் கூறுவார்கள். ஆனால் அதுவல்ல விடையம். சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் என்ன கதைத்துள்ளார்கள் என்பதுதான் முக்கியமான விடையம்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்பட்ட 13 ஆம் திருத்த சட்டத்தை அது கொண்டுவரப்பட்ட நாளிலே அல்லது இன்று கூட அதனை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினை தீர்வாக முன்மொழியப்பட்ட அரசியல் அமைப்பு கூட 13 ஆம் திருத்தச் சட்டம் பற்றிய கதை எதுவுமே இல்லை. அத்தகைய நிலையில் 13 இற்கு மேல் அல்லது 13 இற்கு அப்பால் என்ற நிலையில்தான் தீர்வுக்கான முயற்சிகள் இடம்பெற்றன.
இலங்கை இந்தியாவுக்கு இடையிலான கலந்துரையாடலும் அவ்வாறே அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இவர்கள் மாறுபட்ட கதைகளைக் கூறுவது தொடர்பிலே இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சர்வதேச நாடும் குறிப்பாக இந்தியாவும்தான் இதற்குக் கூடிய கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
இந்த நாட்டில் நீண்ட காலமாகவே இனப்பிரச்சினை தீர்வுக்காகத் தொடர்ச்சியான பல போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. இதற்காகப் பல உயிர்களை நாங்கள் இழந்துள்ளோம் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையிலும் கூட சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடனேயே ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக இலங்கை உட்பட ஏனைய நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
அவ்வாறான நிலையில் யுத்த முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 வருடங்கள் முடிவடைந்த நிலையில் இன்னமும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையே காணப்படுகின்றது. அரசாங்கமும் மாறியுள்ள நிலையில் தமிழ் மக்களின் நிலை எவ்வாறு அமையப்போகின்றது என்பது குழப்ப நிலையிலேயே உள்ளது.
இத்தகைய நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் இங்கு ஒரு பிரச்சினை இல்லை என்ற நிலையிலேயே கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள். இவ்விடையங்கள் தொடர்பில் இந்தியா உட்பட சர்வதேசம்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment