ஐ.எஸ் பயங்கரவாதச் செயற்பாட்டாளர்கள் குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களோடு தொடர்புடையோருக்கு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளது. இதை நோக்காகக் கொண்டு, புனர்வாழ்வுப் பிரிவை பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இதன் தலைவராக, யாழ். மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச பயங்கரவாத மற்றும் மத, மொழி, இன தீவிரவாத ஒழிப்பு பிரிவை உருவாக்கினார்.
இப்பிரிவின் தலைவராக ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டார். இதற்கு மேலதிகமாகவே புனர்வாழ்வு பிரிவின் தலைவராக ஜெனரல் தர்சனஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றுடனொன்று மிக நெருக்கமாகத் தொடர்புபட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள, இவ்விரு சிறப்பு பிரிவுகளும் ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் இயங்கவுள்ளன.
புலிகள் இயக்க செயற்பாட்டாளர்கள், போதைப் பொருள் பாவனை, கடத்தலுடன் தொடர்புடையோர், சூதாட்டக்காரர்களுக்கும் இப்புதிய பிரிவு மூலமாக புனர்வாழ்வளிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக நாடு பூராவும் புனர்வாழ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு, புனர்வாழ்வு வழங்க உத்தரவிடப்படுவோர், இப்புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்படுவர்.
நன்கு பயிற்றப்பட்ட பின்னர் நற்பிரஜைகளாக சமூகத்தில் இணைக்கப்படவுள்ளனர். மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கடந்த வெள்ளிக்கிழமை சம்பிரதாய பூர்வமாக புதிய கடமையை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)
No comments:
Post a Comment