கொவிட் -19 வைரஸ் பாதிப்புக்குள்ளான பயணிகளுடன் ஜப்பானின் யோகோஹாமாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் இருந்து முதலாவது பயணிகள் குழுவினர் கப்பலில் இருந்து வெளியேற்ற தொடங்கியுள்ளனர்.
இதுவரை, கொவிட் -19 வைரஸ் பரவியதிலிருந்து 542 பயணிகள் மற்றும் பணியாளர்கள் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.
சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே மிகப்பெரிய எண்ணிக்கையில் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பலர் கொவிட் -19 நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்தனர். இந்நிலையில், கப்பலில் இருந்த பயணிகள் அங்குள்ள கடினமான தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையை விவரித்து வந்தனர்.
கப்பலில் உள்ள ஏனைய பயணிகள் மீதும் நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் பல நாடுகள் ஏற்கனவே தமது நாட்டுப் பிரஜைகளை அங்கிருந்து மீட்டுள்ளன.
கொவிட் -19 வைரஸினால் தற்போது சீனாவில் 2,004 பேர் உயிரிழந்துள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு சீனாவில் 74,185 பேர் கொவிட் -19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் உலக நாடுகளில் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. பிரான்ஸ், ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் தலா ஒரு இறப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டாவது நபர் வைரஸ் தொற்றால் இறந்துள்ளதாக ஹொங்கொங் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்று பரிசோதிக்கப்பட்டு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாத பயணிகள் மட்டுமே கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சுமார் 500 பேர் இன்று புதன்கிழமை கப்பலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஜப்பானிய அதிகாரிகள் கப்பலில் 88 புதிய நோய்த் தொற்றுகள் இருப்பதாக தெரிவித்தனர், கப்பலில் மொத்தம் 542 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பல நாடுகளும் பிராந்தியங்களும் ஏற்கனவே தங்கள் பிரஜைகளை கப்பலில் இருந்து தனித்தனியாக வெளியேற்றியுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் தமது பிரஜைகளை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளன.
No comments:
Post a Comment