உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இன்று (17) எடுத்துக் கொள்ளப்பட்டது. 

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி பல மாதங்களிற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 

மேலும் பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை அடுத்த வழக்கு தவணையை எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இதில் கல்முனை, சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களிற்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேக நபர்களும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment