யானைச் சின்னத்தை இரண்டு தினங்களுக்குள் வழங்காவிடின் புதிய சின்னத்தில் போட்டியிடப் போவதாக, சமத்துவ மக்கள் சக்தியின் (சமகி ஜனபலவேகய) செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பின் போதே ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அவர் ஐக்கிய தேசிய கட்சி அதன் சின்னமான யானையை சட்டபூர்வமாக எழுத்து மூலம் பெற்றுத்தந்தால், அச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியைத் துண்டாடும் எவ்வித சதித்திட்டமும் தமது கூட்டணிக்குக் கிடையாது
சமத்துவ மக்கள் சக்தியின் கூட்டணியில் பிரதான பங்காளிக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சியுள்ளது. சஜித் பிரேமதாஸவும், தானும் இதில் முக்கிய பதவி வகிக்கின்றோம்.
தாய்க் கட்சிக்கு துரோகமிழைக்கும் எந்த குறுகிய எண்ணமும் கிடையாது. சமத்துவ மக்கள் கட்சியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமையவே இப்புதிய கூட்டணி அமைக்கப்பட்டது.
இதன் தலைவராக சஜித் பிரேமதாஸவை பிரேரித்ததும் ரணில் விக்கிரமசிங்கவே. செயலாளராக எனது பெயரை சஜித் பிரேமதாஸ செயற்குழுவுக்கு அறிவித்ததும் அதுவும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பிரதமர் வேட்பாளராகவும், வேட்புமனுக் குழுத் தலைவராகவும் சஜித் பிரேமதாஸவையே செயற்குழு அங்கீகரித்துள்ளது. தொடர்ந்தும் நாம் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இருப்போம். இதில் எவ்விதமாற்றமும் இல்லை.
சமத்துவ மக்கள் சக்தியை ஒரு கூட்டணியாக அமைத்தே பதிவு செய்ய விண்ணப்பத்தோம். எனினும் நாம் முன்மொழிந்த பெயரில் சிறு மாற்றம் செய்யப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சின்னம் தொடர்பில் இதுவரைத் தீர்மானிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியில் முக்கியமான சிலர் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமெனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர். யானைச் சின்னத்தில் போட்டியிடுவதையும் நாம் விருமபுகிறோம்.
ஆனால் அச்சின்னத்தை பயன்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எழுத்து மூலம் உரிமை வழங்க வேண்டும். தற்காலிகமாகவேனும் அவ்வுரிமையை வழங்கினாலே, தேர்தல்கள் திணைக்களம் அதனை ஏற்றுக்கொண்டு சமத்துவ மக்கள் சக்தியின் சின்னமாக யானைச் சின்னத்தை அங்கீகரிக்கும்.
அடுத்த இரண்டொரு தினங்களுக்கிடையில் இவ்விடயத்தில் தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லாவிடின் நாம் புதிய சின்னமொன்றை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படலாம்.
காலம் கடத்திக் கொண்டும், ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொண்டிருக்க முடியாது. அடுத்த இரண்டொரு வாரத்துக்குள் மக்களைச் சந்திக்கும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். எதிர்வரும் மூன்று வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். இதனால் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டிய அவசரம் இப்போதே ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் சிரேலஷ்ட உறுப்பினர்களையும் அரவணைத்துக் கொண்டே தேர்தல் களத்தில் குதிப்போம். பின்னர் வெற்றி இலக்கை நாடிப் பயணிப்போம். இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சில ஊடகங்கள் இல்லாத முரண்பாட்டை இருப்பதாகக் காட்டி, ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் முயற்சியிலீடுபட்டு வருகின்றன. தயவு செய்து ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment