அரசாங்கத்தினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கான தடை ஏற்படுத்தப்படமாட்டாது - பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் பொறுப்புமிக்கது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 12, 2020

அரசாங்கத்தினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கான தடை ஏற்படுத்தப்படமாட்டாது - பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் பொறுப்புமிக்கது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கான தடை ஏற்படுத்தப்படமாட்டாதென உயர் கல்வி, தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடு, மக்கள், மதங்கள், கலாசாரங்கள் மனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் பிரசுரிக்க முன்னர், ஊடக நிறுவனங்கள் அதனை சுயபரிசோதனைக்கு உட்படுத்துவது சிறந்ததென்றும் அதன் மூலம் சிறந்த ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பொன்று நேற்று தகவல் தொடர்பாடல் அமைச்சில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அரசாங்கத்தின் ஊடகக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் விளக்கமளித்த அமைச்சர், நான் இந்த அமைச்சு பொறுப்பை ஏற்று 90 நாட்களேயாகின்றன. இன்றுதான் முதற் தடவையாக ஊடக பிரதானிகளைச் சந்திக்கின்றேன். எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகள் விசாலமானவை. அதில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் பொறுப்புமிக்க செயற்பாடாகும்.

க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த பின்னர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்காக 1,81,000 மாணவர்கள் தகைமை பெறுகின்றனர். எனினும் 30,000 பேரே பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். 

இதற்கான தகைமை இல்லாதவர்கள் முச்சக்கர வண்டி சாரதியாகவும் மேலுமொரு தரப்பினர் வேறு தொழில்களிலும் ஈடுபடுவதுடன் முடிந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றும் கல்வி கற்கின்றனர்.

சில மாணவர்கள் அவ்வாறு கற்பதற்காக வெளிநாடு செல்லும் போது பெற்றோர்களின் சொத்துக்கள், காணிகள், வீடுகளைக்கூட அடகு வைத்துவிட்டு செல்வது வேதனைக்குரியது.

பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெறும் சில தரப்பினர் பகிடிவதை காரணமாக கல்வி நடவடிக்கைகளை முடித்துக் கொள்கின்றனர். பகிடிவதை அச்சம் காரணமாக 2000 க்கு மேற்பட்ட மாணவர்கள் அவ்வாறு செல்வதால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கை சீர்குலைந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ், பகிடிவதை மீதான அச்சம் நீக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக எதிர்வரும் மாதத்தில் அங்கு விஜயம் செய்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

சுதந்திரமான சிறந்த ஊடகத்தை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். அரச ஊடகங்கள் தவறான வழியில் செயற்படுமானால் அதனை சரிசெய்வதற்கு நாம் நடவடிக்கையெடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment