இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் 33 இலட்சம் கிலோ நெல் கொள்வனவு - அரிசி வர்த்தக மாபியாக்களை முறியடிக்க அரசு அதிரடித் திட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 12, 2020

இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் 33 இலட்சம் கிலோ நெல் கொள்வனவு - அரிசி வர்த்தக மாபியாக்களை முறியடிக்க அரசு அதிரடித் திட்டம்

நெல் சந்தைப்படுத்தல் சபை, கடந்த இரண்டு வார காலத்திற்குள் 16 கோடியே 34 இலட்சத்து 30,000 ரூபா பெறுமதியான 32 இலட்சத்து 68,600 கிலோ நெல்லை கொள்வனவு செய்துள்ளது. இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இந்த நெல்கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காகவும் அரிசி வர்த்தகத்தில் நிலவும் அரிசி மாஃபியாவை முறியடிக்கும் நோக்குடனும் இலங்கை இராணுவம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தும் சபை, இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்கின்றது. 

நாடு முழுவதுமுள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம், மாவட்ட செயலகங்கள் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகப்படியாக 18 இலட்சத்து 88,950 கிலோ நெல், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உதவியுடன் 8 இலட்சத்து 70,350 கிலோ நெல் வவுனியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மிகுதி 5 இலட்சத்து 09,350 கிலோ நெல் மேற்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 

நெல் சந்தைப்படுத்தும் சபையினால் இதுவரை மொத்தமாக 11 இலட்சத்து 96,950 கிலோ கீரி சம்பா மற்றும் 14 இலட்சத்து 36,000 கிலோ வெள்ளை நாட்டரிசி ஆகியன கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இது நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட அதிகூடிய தொகையாகும்.

நெற்கொள்வனவு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவினால், இராணுவ சேவை படையணியின் படைத் தளபதி இந்திரஜித் கந்தனராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

கொள்வனவு செய்யப்படும் நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான பாழடைந்த நிலையில் காணப்பட்ட 38 களஞ்சியசாலைகளை இலங்கை இராணுவத்தினர் புனரமைப்பு செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

நெல்லை கொள்வனவு செய்வதில் இலங்கை இராணுவத்தின் ஈடுபாடானது விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற உதவியது எனவும், இராணுவத்தின் இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தக்க தருணத்தில் பிந்திய அறுவடை நுட்பங்களை ஊக்குவிக்க உதவியதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் நடவடிக்கை பணிப்பாளர் சமன் பாலிதா பண்டாரா தெரிவித்தார்.

கடந்த ஆண்டு விவசாயிகளிடமிருந்து வெள்ளை நாடு ஒரு கிலோ ரூ. 37 விற்கும் சம்பா ஒரு கிலோ 41 விற்கும் கொள்வனவு செய்யப்பட்டது. ஆனால், இராணுவத்தின் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ. ஒரு கிலோ நெல்லுக்கு ரூபா 50 என்ற நியாயமான விலை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மொத்த நெல் உற்பத்தியில் 10% ஐ கொள்வனவு அரசாங்கத்தின் இலக்கு எனவும் இது மொத்த தேசிய உற்பத்தியில் 3இலட்சம் மெட்ரிக் தொன் ஆகும் எனவும் நெல் களஞ்சியப்படுத்தல் சபையின் நடவடிக்கை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment