இனவாத, மதவாத சிந்தனையின் மூலம் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற கருத்து தற்போது நாட்டில் மேலோங்கியிருக்கின்றது - மன்சூர் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

இனவாத, மதவாத சிந்தனையின் மூலம் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற கருத்து தற்போது நாட்டில் மேலோங்கியிருக்கின்றது - மன்சூர் எம்.பி.

சிறுபான்மை கட்சித் தலைவர்களை சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரானவர்கள் என்று காண்பிப்பதன் மூலம் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலிலும் சிங்கள மக்களின் வாக்குகளை தம்பக்கம் மாற்றலாம். என்ற எண்ணத்தில் அரசியல்கட்சிகளும், அமைப்புக்களும் செயற்பட்டு வருகின்றன.

இனவாத, மதவாத சிந்தனையின் மூலம் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற கருத்து தற்போது நாட்டில் மேலோங்கியிருக்கின்றது. இத்தகைய நிலைமை தொடருமானால் நாட்டில் நல்லிணக்கம் என்பது கானல் நீராக மாறுவதுடன் ஐக்கியமும், ஒருமைப்பாடும் ஒருபோதும் எட்டப்போவதில்லை. என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் தனது சம்மாந்துறை அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களுடான சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் – பௌத்த சிங்கள மக்கள் தனி சிங்கள தலைவரை தெரிவு செய்ததை போன்று தனி சிங்கள அரசாங்கத்தையும் தோற்றுவிக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருப்பதானது நாட்டின் இறையாண்மையை முற்றிலும் பாதித்து நாட்டை துண்டாடி பிரிவினைவாதத்தை முன்வைப்போருக்கு சாதகமாக அமைந்து விடும்.

மதவாதத்தையும், இனவாத்தையும் பரப்பினால் சிங்கள பெரும்பான்மை வாக்குகளை பெறமுடியும் என்று இனவாத சக்திகள் தற்போது கருதி வருகின்றனர். இத்தகைய போக்கானது நாட்டை மீண்டும் அதலபாதாளத்திற்குள் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும்.

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் சிறுபான்மை இனமக்களை கிள்ளுக்கீரையாகளாக கருதி செயற்படுவதற்கும் தென்னிலங்கையில் உள்ள இனவாத சக்திகள் முனைந்து வருகின்றன.

இந்த நிலையில்தான் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரின் அண்மைக்கால கருத்துக்கள் அமைந்து வருகின்றன.

கடந்த ஜனபதிபதித் தேர்தலுக்கு முன்னர் சிறுபான்மை மக்களின் வாக்குகள் நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கம் நிலைமை காணப்பட்டது. ஆனால் கடந்த தேர்தலில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை ஆதரித்ததன் காரணமாக இந்த நிலைமை மாற்றம் பெற்றது.

தனிச்சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்று கோரும் ஞானசார தேரர் அந்த அரசாங்கத்தில் அடிப்படைவாத சிந்தனையற்ற தமிழ், முஸ்லிம் புதிய கட்சிகள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றார். இதிலிருந்து தற்போது அரசியல் களத்தில் உள்ள சிறுபான்மையின கட்சிகளை அவர்கள் அடிப்படைவாத கட்சிகளாக நோக்குவதாக தெரிகின்றன.

அடிப்படைவாதத்திற்கு துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ள அந்த கருத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் முஸ்லிம் மக்களின் மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் வன்மையாக கண்டிக்கிறேன்.

எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலும் இத்தகையதொரு நிலைமையை உருவாக்குவதற்கு பொதுஜன பெரமுன முயன்றுவருகின்றது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே கலகொட அத்தே ஞானசார தேரரின் கருத்து அமைந்துள்ளது.

எனவே, எங்களுக்கு உரித்தான இருப்பு, கலாசாரம், மதம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வதற்கும், எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாமல் போராட முஸ்லிம் காங்கிரஸ் தயாராகவுள்ளது. அதற்கு எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் மக்கள் ஒன்றுபட்டு அதற்கான ஆணையினை வழங்க வேண்டும். என்றார்

No comments:

Post a Comment