கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த, சீனாவின் வூஹான் நகரிலிருந்து இலங்கையைச் சேர்ந்த மாணவர்களை அழைத்து வந்த குழுவினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் ஶ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையைச் சேர்ந்த இக்குழுவில் விமானிகள் சமிந்த சொய்ஷா, அனுஷ்க ஜீவந்தர மற்றும் பர்ஹான் ஹனீபா தலைமையிலான விமான சேவை பணிக்குழாம் அவர்களுடன் விமான பொறியாளர்கள் லிலந்த பத்பெரிய, ருமேஷ் பதிராஜா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
குறித்த UL 1422 எனும் விமானம் நேற்றையதினம் (31) வூஹான் புறப்பட்டு அங்கு சென்றடைந்து இன்று (01) மீண்டும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கையை வந்தடைந்த இவர்களை இராணுவ இரசாயனத் உயிரியல் கதிரியக் மற்றும் அணு குழுவினரால் வரவேற்கப்பட்டதுடன் இவர்களுக்கு இக் குழுவினரால் ஆரம்ப கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் அதில் வந்த மாணவர்கள் உள்ளிட்டோர் பின்னர் அங்கிருந்து தியத்தலாவை இராணுவ முகாமில் இதற்கென அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் (quarantine) கட்டடத் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இங்கு அவர்கள் தனித்தனியான அறைகளில், தனித்தனியாக கவனிக்கப்பட்டு அவதானிக்கப்படவுள்ளனர். 14 நாட்களுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவர்கள் தங்களது உறவினர்களுடன் இணைக்கப்படவுள்ளனர்.
ஆயினும் ஆரம்ப கட்ட சோதனையில் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவர்களிடம் குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும், குறித்த நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அவதானிப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு மாணவர்களை தங்கவைத்துள்ள இராணுவ சுகாதார பிரிவில் கடுமையான பாதுகாப்புகள் உறுதி செய்யபட்டுள்ளதோடு, அவர்களின் உடல் நிலை குறித்தும் தீவிர கண்கானிப்பில் இருப்பதாக இராணும் தெரிவித்துள்ளது.
கொழும்பு இராணுவ வைத்திய முகாமின் நோய் தடுப்பு பரிசோதனை மற்றும் சுகாதார சேவைகள் துணை இயக்குநனரான வைத்தியர் செமேஜ் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின் பின்பே இதனை தெரிவித்துள்ளார்.
மாணவர்களை அழைத்து வந்த விமானம் உரிய சுகாதார நடவடிக்கைகளின் பின்னர் பிற்பகல் 1.15 மணியளவில் மீண்டும் கட்டுநாயக்க புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவர்களுக்கு தனித்தனியான அறைகள், கழிவறைகள், சலவை இயந்திரங்கள் என தனிமைப்படுத்தப்பட்டு WiFi உள்ளிட்ட சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
இவர்களில் 4 சிறுவர்கள் உள்ளதாகவும் அவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தங்க வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த திட்டமானது பதில் பாதுகாப்பு பிரதாணியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தினரால் 31 ஆம் திகதி மாலை வரையில் இந்த மாணவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள், தனிமைப்படுத்த வசதிகளை உள்ளடக்கிய 100 x 20 சதுர அடியில் இரண்டு புதிய கட்டிடங்களின் நிர்மான பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதற்கமைய மருத்துவ ஆலோசகர்கள், தொற்று நோயியல் நிபுணர்கள் மற்றும் வேறு வைத்திய அங்கத்தவர்களின் மேற்பார்வையின் கீழ் குறைந்தது 14 நாட்கள் வரை இந்த மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment