திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் தீ பரவிய லொறியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 3.20 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் தீ பரவியதாக பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, தம்பலகாமம் பொலிஸார் அங்கு சென்று, பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
பின்னர் லொறியை சோதனையிட்ட போது, சாரதியின் ஆசனத்திற்கு பின்பக்க ஆசனத்தில் தீக்கிரையாகிய சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 48 வயதான யோகராஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நேற்று காலை லொறியில் அரிசியை ஏற்றிக்கொண்டு நிலாவௌியிலிருந்து ஹிங்குரங்கொடவிற்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இரண்டு நெல் ஆலைகளுக்கு நெல்லை வழங்கிவிட்டு லொறி உதவியாளருடன் நேற்று பகல் 02.30 மணி அளவில் அவர் ஹிங்குரங்கொடயிலிருந்து புறப்பட்டமை அங்கிருந்த CCTV காட்சியில் பதிவாகியுள்ளது.
யோகராஜன் பயணத்தை ஆரம்பித்த 12 மணித்தியாலங்களின் பின்னர், திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 11 மணியளவில் கணவரிடமிருந்து தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அவரின் மனைவி கூறினார்.
நெல்லை விற்பனை செய்த பின்னர் அவரிடம் 5 இலட்சம் ரூபா பணமும், ஒன்றரை இலட்சம் ரூபாவிற்கான காசோலையும் காணப்பட்டதாக, யோகராஜனுக்கு நெல் வழங்கியவர் கூறினார்.
திருகோணமலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீர இன்று பகல் சடலத்தை பரிசோதனைக்கு உட்படுத்தினார். மண்ணெண்ணெய் மூலம் தீ பரவியதால் லொறி தீப்பற்றியுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment