அடிப்படைவாதிகளற்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதே பெரமுனவின் எதிர்பார்ப்பு - சுதந்திர கட்சி எமது கொள்கைகளுடன் இணங்கினால் இணைந்து பயணிக்கலாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

அடிப்படைவாதிகளற்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதே பெரமுனவின் எதிர்பார்ப்பு - சுதந்திர கட்சி எமது கொள்கைகளுடன் இணங்கினால் இணைந்து பயணிக்கலாம்

அடிப்படைவாதிகளற்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்பார்ப்பாகும். இதற்கு மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், பொதுஜன பெரமுன தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணிக்கு இணைத் தலைவர்கள் இருக்க வேண்டுமென எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவ்வாறானதொரு பதவியை கோரியிருக்கவில்லை. நான்கு வருடங்கள் மாத்திரமே ஜனாதிபதியாக இருப்பேன். பின்னர் பொலனறுவையிலிருந்தே அரசியலை முன்னெடுப்பேன் என்றும் அதன் பின்னர் அரசியலில் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர் கூறியிருந்தார். ஆகவே, அவர் மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டாரென நம்புகிறோம்.

நாட்டில் உள்ள அனைத்து இடதுசாரி முகாம்களும் எம்முடன் இணைந்து பயணிக்க முடியும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரமல்ல எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள எவரும் இணைந்து பயணிக்கலாம். இத்தேர்தலில் வெற்றி வேட்பாளர்களை நாம் முன்னிறுத்த எதிர்பார்க்கிறோம். சுதந்திர கட்சியை நிராகரிப்பது எமது நோக்கமல்ல. எமது கொள்கைகளுடன் இணங்கினால் இணைந்து பயணிக்கலாம்.

அதேவேளை, அடிப்படைவாதிகளற்ற சக்தி வாய்ந்த பாராளுமன்றத்தை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைக்க முடியும். அதற்காக மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை நாம் இட்டுள்ளோம். மக்களும் இதனை உணர்ந்துள்ளனர் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment