மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ள தடயவியல் கணக்காய்வு அறிக்கை சட்ட ரீதியில் அடிப்படையற்றதென இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரணிலை நிரபராதியாக்கவே 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு சட்ட ரீதியில் அடிப்படையற்ற தடயவியல் கணக்காய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சபையில் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மத்திய வங்கி பிணைமுறிக் கொள்ளையின் பிரதான சூத்திரதாரி ரணிலே. அவருக்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்ட பிணைமுறி மோசடியின் சூத்திரதாரியான ரணிலுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவில்லை. அதற்கு ஐக்கிய தேசிய கட்சில் உள்ள அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். முறையான விசாரணைகளூடாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
அரச நிதி மோசடிகள் தொடர்பில், கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கே விசாரணைகளை மேற்கொள்ள முடியும். ஆனால் மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடயவியல் கணக்காய்வு, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அனுமதியோடு மேற்கொள்ளப்படவில்லை.
ரணிலைக் காப்பற்ற வேண்டுமென்பதற்காக இது திட்டமிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தும் இதனைக்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் தயாரிக்கப்பட்டிருந்தால் அதனைக் கொண்டு சட்டநடவடிக்கை எடுத்திருக்க முடியும்
இது ஒரு தவறான செயற்பாடு. ரணிலை நிரபராதியாக்கவே இவ்வளவு செலவிடப்பட்டு சட்ட அடிப்படையற்ற இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே தடயவியல் கணக்காய்வு அறிக்கைக்கு செலவு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பில் மத்திய வங்கி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மோசடியே உண்மையான மோசடி. இதுவே திட்டமிடப்பட்ட மோசடி. இதற்கு அரச அனுசரனையும் வழங்கப்பட்டுள்ளது. யாராவது மோசடி செய்திருப்பார்களானால், கணக்காய்வாளர் தலைமை அதிபதியைக் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளுங்கள். 2005 - 2015 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிணை முறி மோசடி தொடர்பில் சட்ட ரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 95 சதவீத பிணைமுறிகள் அரச வங்கிகளுக்கே வழங்கப்பட்டுள்ளன என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment