(ஆர்.விதுஷா)
மருந்துப்பொருள் மாபியாவை இல்லாதொழிக்க புதிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்ட தரப்பினர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் கவனம் செலுத்தி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், இவ்வாறான மருந்துப்பொருள் மாபியாவை இல்லாதொழிப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றையும் அந்த சங்கம் முன்வைத்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசாங்க வைத்தியசாலைகளில் கடந்த 4-5 வருட காலப்பகுதியில் காணப்பட்ட மருந்துப்பொருள் பிரச்சினைகள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அந்த வகையில், அரசாங்க வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, தரம் குறைந்த மருந்துப் பொருட்களின் விநியோகம் மற்றும் மருந்துப் பொருள் தட்டுப்பாட்டுடன் கூடிய மருந்துப் பொருள் மாபியா மற்றும் ஊழல் தொடர்பில் தொடர்ந்தும் சுட்டிக் காட்டியிருந்தோம்.
இவ்வாறாக நாம் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கணகாய்வாளர் அறிக்கை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை ஆகியவற்றின் ஊடாக இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிருப்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், முன்னாள் சுகாதார அமைச்சரின் கீழ் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுடன் தொடர்பு பட்டவர்கள் இன்னமும் கூட மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட சுகாதார துறை நிறுவனங்களில் இருக்கின்றனர்.
ஆகவே இந்நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து இந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இருப்பினும் இந்த மருந்துப் பொருட்கள் தொடர்பில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் இன்னமும் கூட முழுமையாக நிறைவடையவில்லை. ராஜித சேனாரத்தனவின் ஆட்சியில் இடம்பெற்ற இத்தகைய ஊழல் மோசடிகள் இன்னமும் கூட தொடர்ந்த வண்ணமே உள்ளன.
ஆகவே, இத்தகைய மருந்துப் பொருள் மோசடியைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சில பரிந்துரைகளை சுகாதார அமைச்சருக்கு முன்வைத்துள்ளோம்.
அந்த வகையில்,
மருந்துப் பொருட்களின் தரம் மற்றும் சர்வதேச தரம் குறித்து ஆய்வு செய்வதற்கான வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
அவசர கொள்வனவு நடவடிக்கைகளை நிறுத்தி ஒரு வருடத்திற்கு தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் தரத்திற்கு ஏற்ற விலை அமைய வேண்டும்.
நிபந்தனைகளுக்கு அடிபணியும் வகையில் தெரிவு செய்யப்பட்ட மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யும் நிறுவனங்களுக்கு கூடிய அதிகாரத்தை வழங்குகின்றமையை நிறுத்த வேண்டும்.
மருந்து வகைகளின் தட்டுப்பாடு மற்றும் தரம் தொடர்பான பிரச்சினைகளை கையாள சுகாதார அமைச்சில் தனிப்பிரிவை ஸ்தாபித்தல் வேண்டும். அந்த பிரிவிற்கான தொலைபேசி இலக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குதல் அவசியமானதாகும்.
ராஜித சேனாரத்ன கடற்றொழில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் அண்மையில் வெளிக்கொண்டுவரப்பட்டது. அதேபோன்று கடந்த ஐந்து வருடங்களாக சுகாதார அமைச்சில் மருந்துப் பொருள் கொள்வனவின் போது இடம் பெற்ற மோசடிகள் குறித்து ஆராய்ந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்கழுவின் அறிக்கையினை மக்கள் மயமாக்கி அதன் பரிந்துரைகளின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் கொள்வனவு நிறவனங்களுக்கு எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாதவாறு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளை, காலாவதியன மருந்துப் பொருட்கள் மற்றும் தரத்தில் குறைவான மருந்துகளை கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட பல மில்லியன் ரூபாய் நிதியினை குறித்த நிறுவனத்திலிருந்து மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பங்குதாரரர்களின் கூட்டமொன்றை உடனடியாக ஏற்படுத்தி தற்போதைய நிலமையை மீளாய்வு செய்து நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறு தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட மருந்து வழங்குனர்களை அழைத்து அவர்கள் மீளச் செலுத்த வேண்டிய பணத்தை அறவிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முன்னாள் சுகாதார அமைச்சின் கீழ் இடம் பெற்றதாக கூறப்படும் மருந்து மாபியா தொடர்பில் புதிய சுகாதார அமைச்சு உள்ளிட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தியிருக்கும் நிலையில் இது தொடர்பில் சுகாதர அமைச்சு முன்னெடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எப்பொழுதும் கவனம் செலுத்தும் என்றார்.
No comments:
Post a Comment