பொதுமன்னிப்பு காலத்தில் சட்டவிரோத துப்பாக்கிகள் 200 கையளிப்பு - துப்பாக்கிகள் வைத்திருப்போர் தொடர்பில் சுற்றிவளைப்புகள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 18, 2020

பொதுமன்னிப்பு காலத்தில் சட்டவிரோத துப்பாக்கிகள் 200 கையளிப்பு - துப்பாக்கிகள் வைத்திருப்போர் தொடர்பில் சுற்றிவளைப்புகள்

(செ.தேன்மொழி) 

சட்டவிரோத துப்பாக்கிகளை கையளிக்குமாறு குறிப்பிட்டு அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரையில் சட்டவிரோத துப்பாக்கிகள் 200 கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் எப்.ஜே.என். சேனாரத்ண தெரிவித்தார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை ஜனாதிபதியினால் சட்டவிரோத துப்பாக்கிகளை கையளிக்குமாறு குறிப்பிட்டு விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டிருந்தது. 

அதற்கமைய பொதுமன்னிப்பு காலமாக இந்த வாரத்தை அறிவித்திருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த காலக்கட்டத்தில் தம்வசம் உள்ள துப்பாக்கிகளை கையளிப்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்திருந்தார். 

இந்த விடயம் தொடர்பில் ஊடகப் பணிப்பாளர் குறிப்பிடுகையில், பொதுமன்னிப்பு காலத்திலே சட்டவிரோத துப்பாக்கிகள் 200 கையளிக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் குழல் 16 ரக துப்பாக்கிகள் 152, இரட்டை குறுந்தூர துப்பாக்கிகள் 02, ரிப்பீட்டர் ரக குறுந்தூர துப்பாக்கிகள் 05, ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் 07, ரைபிள் ரக துப்பாக்கிகள் 06, பிஸ்டல் ரக துப்பாக்கிகள் 08 மற்றும் 20 துப்பாக்கிகளும் கையளிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை திங்கட்கிழமை முதல் இவ்வாறு சட்டவிரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கிகள் தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெறும் தகவலுக்கமையவே இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்கப்பட்டால். அதனை வைத்திருக்கும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment