மலையகத்தில் கடும் வறட்சியுடனான காலநிலை நிலவுவதால் நீரேந்து பகுதிகளில் நீர் வற்றும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது.
மழையின்மையால் மவுசாக்கலை மற்றும் காசல் ரீ நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்து வருகின்றது. நீர் மின்சார உற்பத்திக்கு இந்த இரண்டு நீர்த் தேக்கங்களுமே பிரதானமானவை.
இவற்றில் இருந்தே லக்சபான, நியூ லக்சபான, கென்யோன், விமலசுரேந்திர மற்றும் பொல்பிட்டிய மின்சார உற்பத்தி நிலையங்கள் தேசிய ரீதியில் மின்சாரத்தை விநியோகிக்கின்றன. மவுசாக்கலை மற்றும் காசல் ரீ நீர்த் தேக்கங்களில் காலை 6 மணிக்கு முறையே 19.5 மற்றும் 19 அடி நீரே இருந்தமை அளவீடு செய்யப்பட்டுள்ளது.
பல கிராமங்களில் உள்ள கிணறுகள், நீர் ஊற்றுக்கள் வற்றி வருவதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதில் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தொடரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைந்து வருகின்றது. இந்நிலைமையினால் சமனலவெவ நீர்த் தேக்கத்தில் நீர் மட்டம் அரைவாசிக்கும் அதிகமாக குறைந்துள்ளது.
இதனால் இப்பிரதேசத்தில் நிலவிய சாதாரண சீதோஷ்ன காலநிலை வரட்சியான உஷ்ணமான நிலைமைக்கு மாறி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இம்புல்பே மற்றும் பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவுகளில் கிணறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம்புல்பே பிரதேசத்தின் உல்லாச வலயத்திலுள்ள நீர் வீழ்ச்சிகள், ஆறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. இதனால் உல்லாச விடுதிகள், உணவகங்கள் மற்றும் வழிநடத்துனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி நிருபர்
No comments:
Post a Comment