சுதந்திரக் கட்சி தொடர்பில் மொட்டுக் கட்சியின் பின் வரிசையினர் தெரிவித்து வரும் கருத்துக்கள் கவலையளிக்கின்றன - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

சுதந்திரக் கட்சி தொடர்பில் மொட்டுக் கட்சியின் பின் வரிசையினர் தெரிவித்து வரும் கருத்துக்கள் கவலையளிக்கின்றன

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்பாக மொட்டுக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வரும் சில கருத்துக்கள் தொடர்பாக தான் கவலையடைவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஹூங்கம, பிரதேச தஹம் பாடசாலை மாணவர்களுக்காக இலவச சீருடைத் துணிகளை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டுஉரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது, ஜனாதிபதியை வெற்றியீட்டச் செய்வதற்காக அர்ப்பணித்த ஒரு கட்சிக்கு எதிராக இவ்வாறு கூறிவருவது தொடர்பாக நான் கவலையடைகிறேன். இதனை ஒரு நல்ல நிலைமையாக கருத முடியாது. 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றியீட்டச் செய்வதற்காக அர்ப்பணிப்பு செய்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  தொடர்பாக இவர்கள் தெரிவித்து வரும் கருத்தக்களை ஏற்க முடியாது. இவர்கள் எம்மை இவர்களது எதிர்க் கட்சியினராக கருத முற்படுகிறார்கள். இதனை ஒருபோதும் ஏற்க முடியாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்ப்பதை விட்டுவிட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக அறிக்கைவிட்டு வருகிறார்கள். விருப்புவாக்கு போட்டியினால் தங்களுக்கு இம்முறை விருப்புவாக்குகள் குறையும் என்ற அச்சத்தில் இவர்கள் இவ்வாறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

இன்னும் சிலர் தங்களுக்கு பாராளுமன்ற அங்கத்துவம் கிடைக்காது என்ற நிலையிலும் இருந்து வருகிறார்கள். இவர்கள் என்னதான் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் ஜனாதிபதியும், பிரதமரும் நாம் செய்த அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் நன்கு அறிவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை நிருபர்

No comments:

Post a Comment