பாராளுமன்றத்தை எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் ஜனாதிபதியால் கலைக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பிரிவுப் பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா நேற்று தெரிவித்தார்.
19 ஆவது திருத்தத்துக்கமைய அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் 4 1/2 வருடங்கள் நிறைவடையும் பட்சத்தில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல முடியும்.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி அல்லது மூன்றாம் திகதி பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாக ஆளும் தரப்பு வட்டாரம் தெரிவித்திருக்கின்றது.
ஆனால், மார்ச் முதலாம் திகதி வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லையெனத் தெரிவித்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு சட்டப் பணிப்பாளர். பெப்ரவரி 28 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் எந்த நேரத்திலும் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனக் கூறினார்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கமைய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் (அமர்வு) நடைபெற்ற தினத்திலிருந்து 4 - 1/2 வருடங்கள் பூர்த்தியடையும் வரை ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இம்மாதம் (பெப்ரவரி) 28 ஆம் திகதியுடன் அரசாங்கத்தின் பதவிக் காலம் 4 1/2 வருடங்கள் முடிவடைகின்றது. எனவே அன்று நள்ளிரவுக்குப் பின்னர் பாராளுமன்றைக் கலைக்க முடியும்.
இந்த 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் ஓராண்டை நிறைவு செய்த பின்னர் அவசியமானால், பாராளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் எனவும் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஐந்தாண்டு பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் பிரகாரம் பெப்ரவரி 28 நள்ளிரவு முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியும்.
இந்த நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் தேர்தலுக்குத்தயாராகி வருகின்றன.
பிரதான கட்சிகளான பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய முன்னணி என்பன தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்தி வருவதையும் காணமுடிகிறது.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment