உணவு பாதுகாப்பு மற்றும் சந்தையில் அரிசியின் விலையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் 20,000 மெட்ரிக் தொன் அரிசி தொகையை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதனால் இக்காலப்பகுதியில் விநியோகிப்பதற்காக அவசியமான அரிசியை பேணுவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அதற்கமைய 24 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை அவசியமான தொகையாக பேணி சேமிப்பதற்கு தேவையான களஞ்சிய வசதியை தற்பொழுது உணவு ஆணையாளர் திணைக்களம் கொண்டுள்ளது.
அத்துடன், அரிசி விலை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில், இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியை சதொச ஊடாக அரசாங்கத்தினால் உத்தரவாதமளிக்கப்பட்ட விலைக்கு வழங்குவதன் மூலம் அரிசியின் விலையை நிலையான மட்டத்தில் பேண எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை பெற்று, 20,000 மெட்ரிக்தொன் சம்பா மற்றும் நாட்டரிசியை கையிருப்பில் பேணுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment