மாங்குள வைத்தியசாலை வளாகத்தில் அகழ்வு - மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள், ஆடைகள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

மாங்குள வைத்தியசாலை வளாகத்தில் அகழ்வு - மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள், ஆடைகள் மீட்பு

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் நேற்று (12) கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றின் உத்தரவுக்கமைய இன்று (13) மேலதிக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுவரும் பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் இருக்கும் நிலையில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்றினால் கண்ணிவெடி அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்தநிலையில், சிதைவடைந்த மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்துக்கு குறித்த விடயத்தை பொலிஸார் கொண்டு சென்ற நிலையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் குறித்த இடத்தை நேற்றையதினம் பார்வையிட்டு அந்த பிரதேசத்தை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அகழ்வு செய்யுமாறு உத்தரவிட்டமைக்கு அமைய இன்றையதினம் மேலதிக அகழ்வு முன்னெடுக்கப்பட்டது .

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனுசன் தலைமையில் பொலிஸார், தடயவியல் பொலிஸார் மற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் பங்கு பற்றுதலுடன் அகழ்வு முன்னெடுக்கப்பட்டது .

இந்த அகழ்வின்போது சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் சில, இரண்டு பேருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் சட்ட வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

(விஜயரத்தினம் சரவணன்)

No comments:

Post a Comment