(ஆர்.விதுஷா)
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அதிகளவிலானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் கவலை வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே ரத்தனதேரர் அந்நாட்டு மக்களை கண்டு அச்சமடைய வேண்டாம் எனவும் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் விரைவில் நலமடைய பிராத்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேவேளை, மிருக கொலையை நிறுத்துவதற்கான சட்டமொன்றை கொண்டுவருமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார்.
இராஜகிரியவில் உள்ள சதஹம் செவனவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதன் தாக்கம் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையிலாக அனைத்து வித நடவடிக்கைகளையும், சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பில் அநாவசியமாக பயப்பட வேண்டிய தேவை இல்லை.
ஆகவே, கொடுக்கப்படும் உண்மை தகவல்களுக்கு அமைய செயற்படுவதன் ஊடாக இந்த நோய் நிலைமையை உரிய வகையில் எதிர்கொள்ளக் கூடியதாகவிருக்கும். அத்துடன், இந்த வைரசின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சீன மக்களையிட்டு கவலையடைகின்றோம்.
கொரோனா வைரசின் தாக்கம் தொடர்பில் சுகாதார அமைச்சு மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானதாகும். கொரோனா வைரஸ் வெறுமனே நோய் தாக்கத்திற்கு உள்ளானவருடைய வியர்வை எச்சில் பட்டால் பரவும் என்று நினைப்பது தவறான விடயமாகும்.
இந்த வைரஸ் எமது வாய் மற்றும் மூக்கின் ஊடாக உடலினுள் பிரவேசிக்கும் போது மாத்திரமே இந்த நோயின் தாக்கம் ஏற்படுகின்றது. ஆகவேதான் முக மூடிகளை பாவிப்பது சிறந்தது என கூறப்படுகின்றது.
அதேவேளை, நோய் எதிர்ப்பு சக்தி எம்மிடத்தில் காணப்படும் பட்சத்தில் இந்த வைரசின் தாக்கம் ஏற்படாது. இந்த வைரசின் தாக்கம் ஏற்படும் அனைவருமே உயிரிழப்பதில்லை. சிறுவர்கள் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகும் நிலைமை மிக குறைந்த மட்டத்திலேயே உள்ளது.
இது வரையில் சீனாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். அவ்வாறெனின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மட்டத்தில் இருப்போரையே வைரஸ் அதிக அளவில் தாக்குகின்றது என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment