ஐக்கிய தேசிய கட்சியினர் அரசாங்கம் அமைப்பதற்கு முன்னர் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளட்டும் : திலங்க எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

ஐக்கிய தேசிய கட்சியினர் அரசாங்கம் அமைப்பதற்கு முன்னர் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளட்டும் : திலங்க எம்.பி.

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

அரச அதிகாரத்தில் இருந்துகொண்டு ஜனாதிபதித் தேர்லை வெற்றி கொள்ள முடியாமல் போன ஐக்கிய தேசிய கட்சி எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு பொதுத் தேர்தலை வெற்றி பெறுவதாக தெரிவிப்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும் என ராஜாங்க அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்தார். 

கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் சாட்டுப்போக்குகளை தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். வாக்களித்த மக்களை ஏமாற்ற வேண்டிய எந்த தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. 

என்றாலும் அரசாங்கம் தற்போது செயற்பட்டுவருவது கடந்த அரசாங்கத்தினால் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையின் அடிப்படையிலாகும். அதனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது. 

இருந்தபோதும் அரசாங்கம் வட் வரியை குறைத்து மக்களுக்கு பாரிய நிவாரணத்தை வழங்கி இருக்கின்றது. அதன் பயன் இன்னும் சில வாரங்களில் பூரணமாக கிடைக்கப் பெறும். 

அத்துடன் மார்ச் மாதம் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்லவதே எமது திட்டமாகும். தேர்தலுக்கு பின்னர் அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதுமான ஒதுக்கீடுகளை மேற்கொள்வோம். 

அத்துடன் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று அரசாங்கத்தை அமைக்கப் போவதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். 

அவர்கள் அரசாங்கம் அமைப்பதற்கு முன்னர் கட்சிக்குள் இருக்கும் தலைமைத்துவ பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும். கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியாதவர்கள் எப்படி மக்களின் பிரச்சினையை தீர்ப்பார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment