இலங்கை நாடு உலக சமூகத்தின் மத்தியில் பிரகாசித்த தசாப்தம் என இந்த தசாப்தத்தினை அழைக்க வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

இலங்கை நாடு உலக சமூகத்தின் மத்தியில் பிரகாசித்த தசாப்தம் என இந்த தசாப்தத்தினை அழைக்க வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

நாட்டைக் கட்டியெழுப்பும் யுகமாக புத்தாண்டு அமைய வேண்டுமெனப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிறக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தினை இலங்கையின் தசாப்தமாக மாற்றியமைப்போம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புது வருடத்தின் பிறப்புடன் நாம் 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறோம். கடந்த மாதம் மிகப் பெரிய மக்கள் ஆணையுடன் புதிய ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரு பின்புலத்திலேயே இலங்கை இவ்வாறு புதிய தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறது. 

அதனுடன் இணைந்து புதிய அரசாங்கம் நிறுவப்பட்டு தற்போது அது தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. இந்த ஆட்சி மாற்றத்துடன் புதியதோர் இலங்கை தொடர்பான எதிர்பார்ப்பு எமது இளம் சந்ததியினர் மத்தியில் பரவிக் காணப்படுகிறது.

அரசாங்கத்தின் எந்தவிதமான தலையீடுமின்றி நாடு முழுவதும் இளைஞர், யுவதிகள் தாமாக முன்வந்து தமக்கு மத்தியிலான ஓர் ஒழுங்கமைப்பினூடாக புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தலைமைத்துவத்தினை ஏற்றுள்ளமை இந்த அலையின் முக்கிய அடையாளமாகும்.

நாடு முழுவதும் பொது இடங்களில் சுவர்களைச் சுத்தம் செய்து, அவற்றில் மனங்கவரும் ஓவியங்களை வரையும் பணிகளில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம். இதனூடாக சில நாட்களிலேயே முழு இலங்கையும் மாற்றமடைந்தது. 

இன்னும் சில இளைஞர் குழுக்கள் இவ்வாறு சுயமாக முன்வந்து விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஆங்காங்கே காணக் கிடைத்தது. சமூக வலையமைப்புகள் மூலம் ஏற்படும் தொடர்புகள் ஊடாகவே இந்த அனைத்தும் இடம்பெறுகின்றன. 

தமது நாட்டைத் தாமே முன்னேற்றுவது எனும் திடசங்கற்பத்துடன் ஏற்பட்ட இந்த இளைஞர்களின் உற்சாகம் புதிய தசாப்தத்தை நோக்கிச் செல்லும் எமக்கு பெறுமதியான வளமாகக் காணப்படுகிறது. 

இதற்கு முன்னர் புலிப் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கும் இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான உற்சாகம் ஏற்பட்டது. அன்று இருந்த இளைஞர்களின் உற்சாகம் புலிகள் அமைப்பினைத் தோற்கடிக்கும் வரை ஓய்ந்து போகவில்லை.

வரலாற்றில் எப்போதாவது 21 ஆம் நூற்றாண்டின் இந்த மூன்றாவது தசாப்தத்தினை மீண்டும் திரும்பிப் பார்க்கும்போது, இலங்கை நாடு உலக சமூகத்தின் மத்தியில் பிரகாசித்த தசாப்தம் என இந்த தசாப்தத்தினை அழைக்க வேண்டும்.

பிறக்கும் 2020 புதுவருடம் மற்றும் ஆரம்பமாகும் புதிய தசாப்தம் ஆகியன அனைத்து இலங்கையருக்கும் எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் யுகமாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment