மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்த நாட்டில் நாம் இடமளிக்கப் போவதில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்த நாட்டில் நாம் இடமளிக்கப் போவதில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்த நாட்டில் நாம் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டையொட்டி வாழ்த்துச் செய்தியொன்றை வௌியிட்டுள்ள அவர், மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பொருளாதாரம், அரசியல், சமூக, கலாசாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது நாட்டில் மலரவேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்க்கின்ற ஒரு தருணத்திலேயே இந்தப் புத்தாண்டு பிறந்திருக்கின்றது. 

அந்த வகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், ‘சுபீட்சத்தின் ஆண்டாக’ ஆக்கும் திடவுறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கின்றது. எமக்கே உரித்தான தொலைநோக்கினை கொண்டதொரு தேசமாக கடந்தகாலத்தில் நாம் அடைந்த வெற்றிகள் ஏராளமானவை.

அத்தகைய எமது தனித்துவ அடையாளங்களையும் திறன்களையும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து வெளிப்படுத்துவதன் ஊடாக சுபீட்சத்தை அடையும் அபிலாஷையுடனேயே ஓர் அரசாங்கம் என்ற வகையில் நாம் புத்தாண்டில் தடம் பதிக்கின்றோம். அத்தோடு தேசிய உணர்வுகளுக்கு முன்னுரிமையளிக்கும் பலமானதொரு பொருளாதாரம் நாட்டுக்குத் தேவையாகும். அதுவே சுயாதீனத்தை நோக்கிய எமது பயணத்தை மேலும் உறுதிப்படுத்தும்.

அதேபோன்று ஒழுக்கப் பண்டானான சமூகத்தினால் பலப்படுத்தப்படும் பாதுகாப்பானதொரு தேசமே மக்களின் முன்மையான எதிர்பார்ப்பாகும் என்பதையும் நான் அறிவேன். அத்தகையதொரு சமூகத்திலேயே தற்கால இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்.

வளர்ந்தவர்கள் என்ற வகையில் நாமும், பிறந்துள்ள இப்புத்தாண்டில் அந்த இலக்கினை நொக்கிப் பயணிப்பதற்கு உறுதியுடன் கைகோர்த்துக்கொள்வோம். நாட்டை நேசிக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு கிடைத்த வெற்றியே இந்த புதிய அரசாங்கமாகும்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் இந்த நாட்டில் நாம் இடமளிக்கப் போவதில்லை. அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே அதன் நோக்கமாகும்.

புத்தாண்டுப் பிறப்புடன் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியபானது, புதியதோரு தேசத்தைக் கட்டியெழுப்பும் ‘சுபிட்சத்தின் நோக்கு’ செயற்திட்டத்தை இலகுபடுத்தும் என்பது எனது உறுதியான நம்பிக்கையும் பிரார்த்தனையுமாகும்.

மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment