மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்த வலப்பனை பகுதியிலுள்ள கற்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2019

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்த வலப்பனை பகுதியிலுள்ள கற்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்த வலப்பனை பகுதியிலுள்ள கற்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை நுவரெலிய மாவட்ட செயலாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார். 

குவாரி மீண்டும் திறக்கப்படவேண்டுமானால், உயர் மட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்திற்கு தாங்கள் அறிவித்துள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

நுவரெலியா, வலப்பனை - மலபட்டாவ பிரதேசத்தில் மண்சரிவில் காணாமல் போயுள்ள 15 வயது மாணவனின் சடலம் 3ஆவது நாளான நேற்றும் (03) கண்டுபிடிக்க முடியாத நிலையில், குறித்த மாணவனின் சடலத்தை தேடும் பணிகளை, நேற்று மாலையுடன் நிறைவு செய்ததாக நுவரெலியா மாவட்ட இராணுவத்தின் பிரதானி மேஜர் அசித்த ரணதிலக்க தெரிவித்தார்.
மேற்படி இடத்தில் ஏற்பட்ட மண்சரிவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள், மகன் ஆகிய நால்வர் மண்ணுள் புதையுண்டதுடன், அவர்களில் மூவர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி மூன்றாவது நாளான நேற்று (03) வரை தொடர்ந்ததுடன் இறுதியில் மீட்புப் பணி கைவிடப்பட்டது.

இதனையடுத்து, வலப்பனை - மலபட்டாவ பிரதேசத்தில், சனிக்கிழமை (30) அன்று மண்சரிவு இடம்பெற்ற இடத்துக்கு அருகில் காணப்படும் கற்குவாரியை உடனடியாக அப்புறப்படுத்துமாறு, வலியுறுத்தி, பிரதேச மக்கள் நேற்று (03) சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலப்பனை ஸ்ரீ தர்மராஜாரமய விகாரையின் விகாராதிபதி தலைமையில், பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து, வலப்பனை - கண்டி வீதி, நாரன்தலாவ சந்தியை மறித்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த கற்குவாரியானது, சீன நிறுவனம் ஒன்றால் நடத்தப்பட்டு வருகிறது. கற்குவாரியின் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்துகொண்டதால், மண்சரிவால் உயிரிழந்த பண்டார என்பவர், கடந்த வருடம், கற்குவாரிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அந்த இடத்திலிருந்து தான் போகப்போவதில்லை என்று தெரிவித்து, ஆர்ப்பாட்டம் மேற்கொண்டார் என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர் மக்கள் தெரிவித்தனர்.

மேலும், மண்சரிவில் சிக்குண்ட குறித்த நபரின் வீட்டிலிருந்து 100 மீட்டருக்கும் குறைந்த தூரத்தில் அமையப்பெற்றுள்ள பாறையை உடைக்கும் செயற்பாட்டை தடுக்க அவர் முயன்றுள்ளார். அங்கு இடம்பெறும் வெடிப்பு செயற்பாடுகளாலேயே மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மணலின் செறிவு குறைவடைந்து மண் சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக 2007ஆம் ஆண்டு தேசிய கட்டட ஆய்வு நிலையம் மேற்கொண்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆய்வின் பின்னர் பிரதேசவாசிகள் அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டனர். ஆனாலும், அவர்கள் அதற்கு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

ஆனால், மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் கற்குவாரியை அமைப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிலையம் அனுமதி வழங்கியிருந்தது.

நிலத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என சம்பந்தப்பட்ட நிறுவனங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இந்த கற்குவாரியை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கற்குவாரிக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள சீன நிறுவனம் 2011 இலிருந்து 2015 வரை கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதியை புனர்நிர்மாணம் செய்துள்ளனர்.

இந்த நிறுவனம் தற்போது ராகல - உடபுஸ்ஸல்லாவ வீதியில் மக்களின் பாரிய எதிர்ப்பினைத் தொடர்ந்தும் கற்குவாரியை கடந்த வருடம் முதல் செயற்படுத்தி வருகின்றனர்.

எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு சட்டப்பூர்வமாகக் கிடைக்கப்பெற்ற ஆவணத்தை ஆதாரமாகக் கொண்டு கடந்த மார்ச் முதலாம் திகதியிலிருந்து குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் இந்தக் கற்குவாரி தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கும் வரை, தாம் சத்தியாகிரகத்தைக் கைவிடப்போவதில்லை என்று, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின் மத்திய மாகாண ஆளுநர் இது தொடர்பில் ஆராய்ந்து இதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டகாரர்கள் இரவு வேளையில் கலைந்து சென்றுள்ளனர்.

மேலும் அனர்த்தம் இடம்பெற்ற மலபட்டாவ - கல்வல பகுதியில் ஆபத்தான இடத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரும் நிலையில், இவர்கள் தற்போது, 2 விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான நிவாரண உதவிகளை பிரதேச செயலகமும், பிரதேசவாசிகளும் வழங்கி வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

No comments:

Post a Comment