7,000 ஊழியர்களுக்கான பற்றாக்குறையால் ரயில் சேவையில் நெருக்கடி - அமைச்சர் அமரவீரவிடம் அதிகாரிகள் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2019

7,000 ஊழியர்களுக்கான பற்றாக்குறையால் ரயில் சேவையில் நெருக்கடி - அமைச்சர் அமரவீரவிடம் அதிகாரிகள் முறைப்பாடு

ரயில் சேவையில் காணப்படும் கடுமையான ஊழியர் தட்டுப்பாடு காரணமாக சில ரயில் நிலையங்களின் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள், பயணிகள் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறையிட்டுள்ளனர்.

20,000 ஊழியர்கள் தேவைப்படுகிற போதும் 13,000 ஊழியர்களே காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், ரயில் பாதை நிர்வகிப்பு, ரயில் நிலைய செயற்பாடுகள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு இடையூறு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஊழியர் பற்றாக்குறை காரணமாக சில ஊழியர்களுக்கு 350 முதல் 400 மணித்தியாலங்கள் வரை மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க வேண்டியுள்ளதாகவும் தொடர்ச்சியாக 37 நாட்கள் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாகவும் ரயில்வே அதிகாரிகள் அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளனர். 
2013 முதல் ரயில் சேவையில் கடும் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகிறபோதும் இதுவரை சரியான தீர்வு வழங்கப்படவில்லை என பயணிகள் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. 

இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஒவ்வொரு தரங்களிலும் காணப்படும் பற்றாக்குறை தொடர்பில் அமைச்சரவையை அறிவூட்டுவதாகவும் அதற்காக தனக்கு அறிக்கையொன்றை வழங்குமாறும் கூறியுள்ளார். 

ரயில் சேவையை மக்கள் ஈர்ப்புள்ள சேவையாக மாற்றுவது தான் அரசின் நோக்கம் என்று குறிப்பிட்ட அவர், தேசிய போக்குவரத்து கட்டமைப்பை புனரமைப்பதினூடாக நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா ரயில் சேவை மீளாய்வு கூட்டம் அமைச்சு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments:

Post a Comment