மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான தமது நிலைப்பாட்டை சகல ஜனாதிபதி வேட்பாளர்களும் அறிவிக்க வேண்டுமென கஃபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். மனாஸ் மக்கீன் மேலும் கூறியுள்ளதாவது, ”சகல மாகாண சபைகளினதும் உத்தியோகபூர்வ கால எல்லை நிறைவடைந்துள்ளது.
சில மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்து வருடக்கணக்காகின்ற போதும், அவற்றிற்கான தேர்தலை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகிவிட்டன.
துரதிஷ்டவசமாக, ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சிந்திக்காமல், பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான விடயங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆட்சிக்காலம் முடிவடைந்த பின்னரும் தேர்தலை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமல் தொடர்ந்து பிற்போடுவதானது, ஜனநாயகத்தை பாதிக்கும் செயலாக அமையும். குறிப்பாக ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்றும் கூறலாம்.
ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று பிரசார மேடைகளில் பல விடயங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை.
இதனூடாக, மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அவர்கள் எவ்வித அக்கறையும் இன்றி காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆகையால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும்.
அரசாங்கம் உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் விட்டதால் தற்போது பல சிக்கல்கள் காணப்படுகின்றன. குறிப்பாக மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. மாகாண சபைகளின் அதிகாரம் முழுமையாக ஆளுநர்கள் வசமுள்ளதால், அவற்றின் சொத்துக்களை ஆளுநர்கள் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்து வருவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக தாம் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து அவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
பாறுக் ஷிஹான்
No comments:
Post a Comment