பாறுக் ஷிஹான்
வட, கிழக்கில் உள்ள சிறுபான்மையினரை நன்றாக புரிந்து கொண்டுள்ள வேட்பாளர் சஜீத் என்கின்ற தலைவனை நாட்டின் தலைமகனாக கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.எம் தாஜுதீன் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் ஏற்பாட்டில் அறுகம்பை தனியார் விடுதியில் இடம்பெற்ற புதிய ஜனநாயக ஐக்கிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களது சேவை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிப்பதற்காகவே தற்போதைய ஜனாதிபதி வேட்பாளராக இன்று அவருடைய மகன் சஜித் பிரேமதாச களமிறங்கியுள்ளார். தந்தை விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பதனாலேயே தான் இன்று அவர் ரணசிங்க பிரேமதாசவின் பாதணிகளை அணிந்து அவரைப் போன்றே ஆடை அணிந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்.
இவர் 1990 ஆண்டு பொத்துவில் பகுதியில் அசாதாரண காலங்களில் இலவச மின்சார இணைப்பை வழங்கி உதவியவர். இவரை பொத்துவில் மக்கள் எவரும் எளிதில் மறந்து விடமாட்டார்கள் என நம்புகின்றேன். மேலும் பொத்துவில் மக்கள் நன்றி மறக்காது ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜீத் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுகின்றேன்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில்தான் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
இனவாத கருத்துக்களையும், தாக்குதல்களையும் மேற்கொள்ளும் மாபெரும் இனவாத முகவர்களான உதய கம்மன்வில, ரத்ண தேரர், ஞானசார தேரர், கருணா அம்மான், பிள்ளையான் போன்ற அனைத்து இனவாத குழுக்களும் ஒன்றாக இணைந்துள்ள கட்சியாகவேதான் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி காணப்படுகின்றது என தெரிவித்தார்.
No comments:
Post a Comment