ஐ.தே.கவைத் துண்டாட நினைப்பவர்கள் முகவரியற்றுப்போவார்கள் என்பது உறுதி - கடும் எச்சரிக்கை விடுத்துவிட்டு மாலைதீவு பறந்தார் ரணில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 3, 2019

ஐ.தே.கவைத் துண்டாட நினைப்பவர்கள் முகவரியற்றுப்போவார்கள் என்பது உறுதி - கடும் எச்சரிக்கை விடுத்துவிட்டு மாலைதீவு பறந்தார் ரணில்

"நாட்டின் எதிர்கால அரசியலை ஐக்கிய தேசியக் கட்சிதான் தீர்மானிக்கப் போகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்துகொண்டும் வெளியில் இருந்துகொண்டும் கட்சியைத் துண்டாட நினைப்பவர்கள் முகவரியற்றுப் போவார்கள். இது உறுதி என்பதைச் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் சொல்லி வைக்க விரும்புகின்றேன்."

இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலைதீவுக்குச் சென்றுள்ளார். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், வஜிர அபேவர்தன, தயா கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் அனோமா கமகே ஆகியோரும் பிரதமருடன் சென்றுள்ளனர். 

மாலைதீவு நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளதுடன் இந்து சமுத்திர மாநாட்டுக்கும் தலைமை வகிக்கவுள்ளார். 

அவர் மாலைதீவு புறப்பட முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருடன் ஜனாதிபதித் தேர்தல், வேட்பாளர் விவகாரம் உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். 

"ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களும் எப்போது நடைபெறும் என்று இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. எனினும், இந்த மூன்று தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெல்வது உறுதி. 

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் விவகாரம் தொடர்பில் எமது கட்சிக்குள் எவரும் முரண்படக்கூடாது. கட்சியின் அனுமதியின்றி பொதுவெளியில் எவரும் கூட்டங்கள் நடத்தக்கூடாது.

உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நாம் முடிவெடுக்க வேண்டும். மற்றக் கட்சிகள் போல் அவசரப்பட்டு முடிவுகளை நாம் எடுக்கக்கூடாது.

இதேவேளை, தனது ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். 

எனது மாலைதீவுப் பயணத்துக்குப் பின்னர் எமது கட்சியின் சகல உறுப்பினர்களையும் அழைத்து இது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளேன்" என்று பிரதமர் ரணில் இதன்போது மேலும் தெரிவித்தார் என குறித்த அமைச்சர் கூறினார். 

charles ariyakumar jaseeharan

No comments:

Post a Comment