மொட்டு அணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக இணைந்த வடகிழக்கின் முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அ.வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.
திருகோணமலையில்லுள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் யுத்தம் இடம்பெற்றது. உயிர்கள் இழக்கப்பட்டன. யுத்தம் நிறைவுக்கும் வந்தது. அதன் பிற்பாடு வட, கிழக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதோடு வடக்கு நோக்கி ரயில் சேவையும் ஆரம்பிக்கப்பட்டன. அத்தோடு 12 ஆயிரத்திற்கு அதிகமான கைதிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் கடந்த 05 வருடங்களாக பெரிதான ஒரு அபிவிருத்தியையும் செய்ய முடியாமல் போயுள்ளது. கம்பெரலிய என்ற ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு நூறு மீற்றர், இருநூறு மீற்றர் என வீதிகளையும், விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களையுமே கொடுக்க முடிந்ததே தவிர குறிப்பிடும் அளவுக்கு எதுவுமே நடைபெறவில்லை.
அத்தோடு அரசியல் தீர்வு கிடைக்குமென்று கூறப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இது விடயமாக 2016 இல் அரசியல் தீர்வு கிடைக்கும், திருவிழாவின் போது அரசியல் தீர்வு கிடைக்கும் என்றெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்டு வந்தார்கள். ஆனால் இவை எதுவுமே தமிழ் மக்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மொட்டு அணியினர் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாவை நிருத்த முடிவெடுத்து விட்டார்கள். இன்னும் ஐக்கிய தேசிய கட்சியினர் யார்? தமது வேட்பாளர் என அறிவிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கிடையே உட்கட்சி பூசல் நிலவி வருகின்றது. எவ்வாறாயினும் எமது கட்சி மொட்டு வேட்பாளர் கோட்டாவிற்கு ஆதரவளிக்க தீர்மானம் எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தோப்பூர் நிருபர்கள்
No comments:
Post a Comment