முஸ்லிம் மக்கள் உட்பட அனைவரும் இன மத பேதங்களை மறந்து ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவையே விரும்புகின்றனர் என இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் செமட்ட செவண 267வது அல்மினா மாதிரி கிராம வீடமைப்பு தொகுதி திறப்பு விழாவில் நேற்றுமுன்தினம் (31) கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாடு முழுவதும் இன்று பேசப்படும் மனிதராக அமைச்சர் சஜித் இருந்து வருகின்றார். முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி அனைவரும் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதியாக வரவேண்டும் என விரும்புகின்றனர்.
இன்று சிலர் கூறுகின்றார்கள் சஜித் பிரேமதாசாவுக்கு நாட்டை ஆழுகின்ற ஆளுமை இல்லையென, அப்படியானால் தற்போதைய ஜனாதிபதி எப்படி வந்தார். அவர் சாதாரண ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பின்னர் அமைச்சராக இருந்து ஜனாதிபதியாக வந்தவர்.
நான் அமைச்சராக பதவியேற்ற போது எனக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. சுகாதார அமைச்சின் செயற்பாடுகளை புரிந்து கொள்வதற்கு இன்று நான் நாடுபூராகவும் சிறப்பாக சுகாதார அமைச்சை முன்னெடுத்து வருகின்றேன்.
ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ளது, இந்நிலையில் ஏழை மக்களுடன் மக்களாக இருந்து நாடு முழுவதும் சேவை செய்யக்கூடிய தூய கரங்கள் உடைய ஒருவரை நாம் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் பங்களிப்புடன் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இந்த வீடமைப்பு திட்டம் திறந்து வைக்கப்பட்டது.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் வேண்டுகோளுக்கிணங்க பொத்துவில் மக்களுக்கான இந்த விடமைப்பு திட்டம் 2017 ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.
திருக்கோவில் நிருபர்
No comments:
Post a Comment