ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உச்ச நீதிமன்றத்திடம் கடந்த வாரம் ஜனாதிபதி கேள்வியெழுப்பியிருந்தார்.
இது தொடர்பான விசாரணை கடந்த 23 ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, அது தொர்பான முடிவுகளை ஜனாதிபதிக்கு அனுப்புவதாக, உச்ச நீதிமன்றம் இதன்போது அறிவித்திருந்தது.
இதன்போது, ஜனாதிபதியின் மனுவுக்கு எதிராக, 13 தரப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் தமது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்திலிருந்து முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது கருத்துகளை வெளியிட்டார்.
புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்றூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கோட ஆகியோரே, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடியதாக அமையுமா என்பது குறித்தான இறுதி முடிவு, உச்ச நீதிமன்ற கருத்தின் முடிவுகளின் அடிப்படையில் அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment