சஜித், கோட்டாவுக்கு சவால் அல்ல - அவர் கோட்டாவுக்குத் தூசி - News View

About Us

About Us

Breaking

Saturday, September 28, 2019

சஜித், கோட்டாவுக்கு சவால் அல்ல - அவர் கோட்டாவுக்குத் தூசி

“ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டாலும், அவர் எமது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு தூசிதான். நவம்பர் 17ஆம் திகதி நாட்டின் தலைவராக கோட்டாபய பொறுப்பேற்பார். நாடாளுமன்ற ஆட்சியிலும் உடனடியாக மாற்றம் வரும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது “ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடக்கூடாது எனக் கருதி சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறக்கினாலும் அவர் தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம். ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைவது உறுதி.

ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் களமிறங்கினாலும் அத்தனை வேட்பாளர்களையும் எமது கட்சி வேட்பாளர் கோட்டாபய தோற்கடிப்பார். சஜித், கோட்டாவுக்கு சவால் அல்ல. அவர் கோட்டாவுக்குத் தூசி.

நவம்பர் 16ஆம் திகதி நள்ளிரவு மாபெரும் வெற்றிச் செய்தி நாட்டு மக்களுக்குக் காத்திருக்கின்றது. மறுநாள் 17ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்பார். அன்றைய தினம் நாடாளுமன்ற ஆட்சியிலும் மாற்றம் நடக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னமும் மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. சஜித் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையை அந்தக் கட்சிக்குள் பலர் விரும்பவே இல்லை. நவம்பர் 16ஆம் திகதியுடன் ஐக்கிய தேசியக் கட்சி முகவரியற்றுப் போய்விடும். அந்தக் கட்சிக்குள் அதிருப்தியில் உள்ள பலர் நவம்பர் 17ஆம் திகதி எம்முடன் கைகோர்க்கத் தயாராகவுள்ளனர்” – என்றார்.

No comments:

Post a Comment