கைது செய்யப்பட்ட, சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜகத் பிரேமலால் விஜேவீர மற்றும் ஓய்வு பெற்ற மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் ராஜபக்ஷ பத்திரகே தொன் தாரக செனவிரத்ன ஆகியோருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுங்கத் திணைக்கத்தினால் கைப்பற்றப்பட்ட 34 தங்கக் கட்டிகளைக் கொண்ட 8 கிலோ கிராம் தங்கத்தை முறைகேடான வகையில், மிக மோசமான நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இருவர் நேற்றைய தினம் (27) கைது செய்யப்பட்டிருந்தனர்.
வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த குறித்த இருவரையும் இன்றைய தினம் (28) கங்கொடவில் பதில் நீதவான் மற்றும் பதுளை பதில் நீதவான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கு விளக்கமறியல் விதித்துள்ளனர்.
ஜகத் பிரேமலால் விஜேவீர ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் , தாரக செனவிரத்ன பதுளை வைத்தியசாலையிலும் வைத்து நேற்றையதினம் (27) CID யினரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அநுராதபுர சந்தஹிரு தூபியில் வைப்பதற்காக தங்கச் சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்காக சுங்கத் திணைத்தின் வசமிருந்த குறித்த 8 கிலோ கிராம் தங்கத்தை வழங்கியதாக நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை சந்தஹிரு தூபியானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2014 ஆம் ஆண்டு, அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் வைப்பதற்கே குறித்த தங்கச் சிலை தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment