நாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களிலும் பொலன்னறுவை அபிவிருத்தியிலும் புதியதோர் எட்டு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் எடுத்து வைக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (28) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சித்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஓய்வு பெறுவதற்கு தனக்கு எவ்வித தேவையும் இல்லை என்றும், நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு தான் சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் பொலன்னறுவை மாவட்டத்திற்காக வரலாற்றில் இடம்பிடிக்கும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பொலன்னறுவை இசிப்பத்தான நலன்புரி சங்கத்தின் சனசமூக நிலையத்தை மக்களிடம் கையளிப்பதை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொலன்னறுவை இசிப்பத்தான விகாராதிபதி சங்கைக்குரிய உடகம தம்மானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment