"குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்படும்போது மனைவி மீது மட்டும் பழியைச் சுமத்தி விட்டு கணவன் தப்ப முடியாது. சகல விடயங்களுக்கும் மைத்திரி - ரணில் அரசுதான் பொறுப்பு."
இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படாமைக்கு நாடாளுமன்றமே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்துக் குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பில் கேட்டபோதே அநுரகுமார மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது "புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று ரணில் - மைத்திரி அரசு பதவியேற்ற காலத்திலிருந்து வலியுறுத்தி வருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை வலியுறுத்துகின்றது.
இதுவரைக்கும் அதனைச் செய்யாமல் இருந்து விட்டு இறுதிக் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மீது மாத்திரம் பழியைச் சுமத்த முடியாது.
இந்த அரசில் கணவான மைத்திரியும், மனைவியாக ரணிலுமே உள்ளனர். குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்படும்போது மனைவி மீது மட்டும் பழியைச் சுமத்தி விட்டு கணவன் தப்ப முடியாது. சகல விடயங்களுக்கும் மைத்திரி - ரணில் அரசுதான் பொறுப்பு.
இதேவேளை, புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படாமைக்கான பெரும் பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கவேண்டும்" - என்றார்.
No comments:
Post a Comment