முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நாடு ஒரு இருண்ட யுகத்திற்குள் தள்ளப்படும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவாளியாக கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை தோற்கடித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் பல கொலைகளுக்கு காரணமான ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “எமது நாடு தற்போது பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இனவாத, மதவாத, பேரினவாத சக்திகள் ஒன்றிணைந்து, அதில் வெற்றி பெற்று தொடர்ந்து தமது இடைநிறுத்தப்பட்ட பயணத்தை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
இவ்விடத்தில் நாம் குறிப்பிட வேண்டியது, இந்த அரசாங்கம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தப்போவதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தது.
ஜனநாயகம், சுதந்திரம், நீதிக் கட்டமைப்பு, மற்றும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறினார்கள். ஆனால் அவ்வாறு வந்த நல்லாட்சி அரசாங்கமும் அதன் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தொடர்ந்து அந்த அபிலாஷைகளை மூழ்கடிக்கும் வகையிலேயே செயற்பட்டு வந்தார்கள்.
அந்த பின்னணியில்தான் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மற்றைய அனைவரும் உள்நுழைந்தார்கள். எனவே உறுதியளிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் பின்தள்ளப்பட்டன. வேறு சில கைவிடப்பட்டுள்ளன.
ஆனால் அதில் ஒரு நல்ல காரியமும் இடம்பெற்றுள்ளது. அதாவது நாட்டின் தற்போதைய பின்னடைவு மக்களுக்கு நன்கு புரிந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் இவர்களுக்கு இனவாத, மதவாத பேரினவாத ஆட்சியை ஸ்தாபிக்க சந்தர்ப்பம் கிடைக்குமானால் இங்கு பாரிய வீழ்ச்சி ஏற்படும்.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வந்தாலும் வேறொருவர் வந்தாலும் ஒன்றிணைந்த கூட்டணி சார்பில் ஒருவர் வந்தாலும் இனவாத, மதவாத பேரினவாத தரப்பினர் கோட்டாபயவையே களமிறக்கியிருக்கிறார்கள்.
கோட்டாபய என்பவர் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களை முறியடித்து, பல படுகொலைகளை மேற்கொண்டதாக மார்தட்டிக்கொள்பவர் மட்டுமல்லாது, நாட்டில் வேறு பல கொலைச் சம்பவங்களுக்கும் மூலகாரணமாக இருந்துள்ளார்.
அவற்றுக்கெல்லாம் அவர்தான் தலைவராகவும் ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார். எனவே அவர் ஆட்சிக்கு வருவது நாட்டிற்கு ஒரு இருண்ட யுகத்தை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியாகும்.
எனவே, எமது நவ சமசமாஜ கட்சி சார்பில் அனைத்து நலன்விரும்பிகளிடமும் நாங்கள் கேட்டுக்கொள்வது. அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் எமது பொது எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்பதாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment