5000 டொன்னிற்கும் அதிகமான குப்பைகள் அருவக்காடுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2019

5000 டொன்னிற்கும் அதிகமான குப்பைகள் அருவக்காடுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன

கொழும்பு மாநகர சபையிலிருந்து வனாத்தவில்லு - அருவக்காடு குப்பை மேட்டுக்கு இதுவரை 5000 டொன்னிற்கும் அதிகமான குப்பைகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் குப்பை முகாமைத்துவ செயற்திட்ட சமூக நிபுணர் நிமல் பிரேமதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் கொழும்பு மற்றும் முத்துராஜவெலயிலிருந்து 20 முதல் 28 வரையான லொறிகள் குப்பைகளை ஏற்றிச்செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு லொறியில் சுமார் 15 முதல் 20 டொன் அளவிலான குப்பைகள் கொண்டுசெல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொண்டுசெல்லப்படும் லொறிகள் உரிய சுற்றாடல் பாதுகாப்பு முறைமைகளை கையாள்கின்றனவா என்பது தொடர்பாக கண்காணிப்பதாகவும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் குப்பை முகாமைத்துவ செயற்திட்ட சமூக நிபுணர் நிமல் பிரேமதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை கெரவலப்பிட்டிய குப்பைமேட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், குப்பைகளை கொட்டுவதில் சிரமம் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து புத்தளம் அருவக்காட்டில் குப்பைகளைக் கொட்டுவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு தடையின்றி இடமளிக்குமாறு, வனாத்தவில்லு பிரதேச சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதற்கிணங்க, கொழும்பு நகர சபை குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. எனினும் அருவக்காடு பகுதிக்கு குப்பைகளை கொண்டுசெல்வதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், குப்பை ஏற்றிச்சென்ற வண்டிகளும் தொடர்ச்சியாக திருப்பி அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment