தனது அமைச்சு சம்பந்தப்பட்ட அபிவிருத்தி நிகழ்வுக்காக வருகை தரவிருந்த அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கெதிராக அஹங்கமையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இத்தகைய ஈனச்செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கையாலாகா தனத்தின் வெளிப்பாடே இத்தகைய இனவாத ஆர்ப்பாட்டமாகும் எனவும் தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது, அண்மைய ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு முன்பிருந்தே இந்த அரசாங்கம் ஆரம்பமானதிலிருந்தே அமைச்சர் ரிசாதுக்கெதிராக இனவாதிகள் ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சொல்லி வந்தனர்.
ஈஸ்டரை தொடர்ந்து ஐ தேகவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ரதன தேரரின் இனவாதம் காரணமாக அமைச்சர் ரிசாத் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்து தாம் குற்றம் செய்தால் ஒரு மாதத்துள் நிரூபிக்கும்படி தெரிவித்தனர்.
அமைச்சர் ரிசாத் மீது பயங்கரவாதம் சம்பந்தமான எந்த குற்றச்சாட்டும் இல்லை என பொலிஸ் தரப்பு சொல்லியும் இன்னமும் இனவாதிகள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது நாட்டின் நீதித்துறைக்கு அவமானமாகும்.
மாணவ பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தால் தண்ணீரை பாய்ச்சி அவர்களை கலைக்கும் அரசாங்கம் அமைச்சர் ரிசாதுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தை ரசித்துக்கொண்டிருக்கிறது.
சகல அதிகாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு இத்தகைய இனவாதிகளை கட்டுப்படுத்தக்கூட முடியாமல் ஐக்கிய தேசிய கட்சி கண்ணை மூடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது இத்தகைய இனவாதிகளின் பின்னால் இந்த அரசு இருப்பதாகவே சந்தேகப்பட வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment