இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் தொகுதிகளை அதிகரித்து ஆசனங்களின் எண்ணிக்கையை கூட்டினால் போதும். தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேவையில்லை என்பது போலவே சமகால அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் சிறிசற்குணராசா தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் 34ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தேர்தல்கள் பல நடைபெறவுள்ளன. இதனால் கட்சிகள் பலவும் அடிபடுகின்றன. அவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனரா என்று பார்க்க வேண்டும். உண்மையில் மக்களுக்காக கட்சிகள் ஒற்றுமையாக இருந்து செயற்படுவதே சிறந்தது. அதே நேரத்தில் இருக்கின்றவர்களும் மக்களுக்காகச் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும்.
மக்களுக்காக சேவையாற்றிய தர்மலிங்கம் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் படுகொலை செய்யப்படும் போது இன்றைக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற மாவை சேனாதிராசா ஓடி ஒளித்துக் கொண்டதால் தப்பியிருக்கின்றார்.
மேலும் இன்றைக்கு யாசிப்பதற்காகவே பலரும் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால் தர்மலிங்கம் போன்றவர்கள் யாசிப்பதற்கு அரசியலுக்கு வரவில்லை. அவர் பிறப்பாலேயே கோடிஸ்வரராகவே இருந்தார்.
அவரை மக்கள் எந்த நேரத்திலும் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. அத்தோடு மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயற்பட்டிருந்தார். அதனால் மக்கள் அவருக்கு ஆதரவை வழங்கினர். இவ்வாறான நிலைமைகள் இன்றைக்கு இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
பருத்தித்துறை விசேட நிருபர்
No comments:
Post a Comment