சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகளை ஒரே நாளில் மேற்கொள்ளும் சேவையை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் (04) கொழும்பிலுள்ள இலங்கை சுற்றுலா மற்றும் முகாமைத்துவ நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
பல்வேறு காரணங்களால் குறித்த அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக தூர இடங்களில் இருந்து வருவோர் இதற்கென பல தடவைகள் அலைய வேண்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இது சுற்றுலாத்துறை மூலமான வருமானத்தை ஊக்குவிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
தங்குமிடம் மற்றும் சேவை வழங்குதல் தொடர்பில் வருடாந்தம் மீள் புதுப்பிக்கப்பட வேண்டிய இவ்வனுமதிப்பத்திரங்களை, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ஒரே நாளில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜோஹான் ஜயரத்ன தெரிவித்தார்.
குறித்த சேவை வழங்குநர் தொடர்பில் ஏற்கனவே நேரடியாக சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடுத்து குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட நாளில் மு.ப. 8.30 - 10.00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தை வழங்கி, அதற்கான கட்டணத்தை செலுத்துவதன் மூலமான 5 படிமுறைகளின் கீழ் அன்றையதினம் பி.ப. 3.30 - 4.15 நேரத்தில் அதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என ஜோஹான் ஜயரத்ன தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தர நிலை மற்றும் தர உத்தரவாத பிரிவு இதற்கான தயார் நிலையில் உள்ளதாக சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதைவேளை ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கையில் தற்போது பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
தற்போது இடம்பெற்றுவரும் போரா மாநாடு தொடர்பில் ஒரு சில தரப்பினர்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இம்மாநாட்டிற்காக சுமார் 23,000 போரா சமூகத்தினர் இலங்கை வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, இதன் காரணமாக பல்வேறு பிரபல ஹோட்டல்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது களையிழந்த சுற்றுலாத் துறைக்கு பாரிய ஊக்குவிப்பு என்பதோடு, வருமானத்தையும் ஈட்டித் தந்துள்ளது என சுட்டிக் காட்டினார்.
இந்நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சபையின் தலைவர் ஜோஹான் ஜயரத்ன, அதன் பணிப்பாளர் நாயகம் உபாலி ரத்நாயக்க, தர நிலை மற்றும் தர உத்தரவாத பிரிவு பணிப்பாளர் தரங்க ரூபசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment