சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்கும் போராட்டம் அவர் கட்சியினால் நியமிக்கப்படும் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறினார்.
கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை எமது போராட்டம் தொடரும்.
சஜித்தின் பெயரை அறிவிக்க நல்ல நேரம் எது என்பதை பிரதமர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது எமக்குத் தெரியும். ஏனெனில் அவர் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி. அவரது வழிகாட்டலும் ஆசீர்வாதமும் எமக்கு வலிமையை ஏற்படுத்தும் என்று அஜித் பி.பெரேரா அங்கு தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி குருணாகலையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சஜித்தின் சக்தியையும் பிரபலத்தையும் நாம் காட்டுவோம்.
அந்தக் கூட்டம் ஏற்கனவே பதுளையிலும், மாத்தறையிலும் நடைபெற்ற கூட்டங்களை விட வெற்றிகரமானதாக அமையும். அது எமது ஜனாதிபதி தேர்தல் பிரசாரமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அபிவிருத்திக்காக ஒரு வருட காலத்துக்குள் அதிக பணத்தை ஒதுக்கியுள்ள ஒரேயொரு அரசாங்கம் இதுவாகும். ஒவ்வொரு தொகுதிக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென நாம் 10 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளோம்.
அதேநேரம் வடக்கு கிழக்கில் சுகாதாரம், கல்வி, பேக்குவரத்து மற்றும் மத அலுவல்களுக்காக மட்டும் 2019 இல் நாம் 30 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளோம் என்று அமைச்சர் அஜித் பி. பெரேரா அங்கு மேலும் கூறினார்.
No comments:
Post a Comment