பல கோரிக்கைகளை முன்வைத்து அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்த சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் செயலாளருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எச்.எல்.உதயசிறி குறிப்பிட்டார்.
அரச நிர்வாக அமைச்சரின் தலைமையில் உப குழுவொன்று அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாக சேவையில் ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தொழிற்சங்க பிரச்சினைகள் தொடர்பில் தமது ஒன்றிணைந்த குழுவுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, தமது தொழிற்சங்கத்தை கைவிடுவதாகவும் அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எச்.எல்.உதயசிறி தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தினர் இன்று சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சுகாதாரம், ஆயுர்வேதம், திட்டமிடல் முகாமைத்துவம், நில அளவை, கல்வி நிர்வாகம், உள்நாட்டு வருமானம் உள்ளிட்ட 17 துறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
No comments:
Post a Comment