தமிழ் தலைமைகள் கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தவில்லை என ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று அவரது கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியாமைக்கு பிரதான காரணம் தமிழ் தலைமைகள் கிடைத்த சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்தவில்லை. அல்லது பிரச்சினைகளை தீராத பிரச்சினைகளாக வைத்திருப்பதற்கான அணுகுமுறைகளை பின்பற்றியமை தான் காரணம்.
அவர்கள் கடந்த கால நிகழ்கால அனுபவங்களை கருத்தில் வரவிருக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மக்கள் சரியானவர்களை தெரிவு செய்தால் அல்லது பின்பற்றினால் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் உரிமைப் பிரச்சினை, நாளாந்த பிரச்சினை, அபிவிருத்தி மற்றும் யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு தீர்வு காணலாம் என்பதை நான் நம்புகின்றேன்.
எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்த நேரத்தில் எங்களுடைய அரசியல் பலத்திற்கு ஏற்ற வகையில் மக்கள் எதிர்கொள்ளும் சகலவிதமான பிரச்சினைகளுக்கும், நாங்கள் தீர்வு கண்டிருக்கின்றோம். ஆனால் அது போதாது.
மக்களுடைய பிரச்சினைகள், கோரிக்கைகள் பல மடங்கு அதிகம். அதற்கேற்ற வகையில் வரவிருக்கும் சந்தர்ப்பத்தில் மக்கள் எங்களுக்கு போதிய வாக்குகளையும், ஆசனங்களையும் கொடுத்தால் எங்கள் மக்களுடைய பிரச்சினைகளை கணிசமான அளவிற்கு தீர்ப்போம் என்றார்.
வவுனியா விசேட நிருபர்
No comments:
Post a Comment