மக்களின் வாக்குகளால் வெற்றி கொள்ள முடியாதவர்கள் தேசியப்பட்டியல் பதவிகளை வைத்துக்கொண்டு விமர்சிக்க உரிமை கிடையாது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 3, 2019

மக்களின் வாக்குகளால் வெற்றி கொள்ள முடியாதவர்கள் தேசியப்பட்டியல் பதவிகளை வைத்துக்கொண்டு விமர்சிக்க உரிமை கிடையாது

ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கட்சி உறுப்புரிமையைப் பெற்றுகொள்ள எவருக்கும் தார்மீக உரிமை இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவுடன் அண்மையில் இணைந்துகொண்ட இருவர் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐ.ம.சு.முவுக்கே உரித்தான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வைத்துக்கொண்டு கட்சிக்கு எதிராக செயற்பட அவர்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என்றார். 

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். 

மக்களின் வாக்குகளால் வெற்றி கொள்ள முடியாதவர்கள் சுதந்திரக் கட்சியின் தயவில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு, இன்னமும் அதற்கான சம்பளத்தையும் எடுத்துக் கொண்டு கட்சியை விமர்சித்து வருகின்றனர். 

அவர்கள் வேறு கட்சியில் இணைந்து கொள்வதில் எமக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. மக்களால் தெரிவு செய்யப்படாவிட்டாலும் தாம் பெற்றுக் கொண்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துவிட்டு கட்சியை விமர்சிக்கலாம். அதற்கு பதிலளிக்க நாம் தயாராகவிருக்கின்றோம். 

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியானது சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐ.ம.சு.மு கூட்டணிக்கே உரித்தானது. இது மஹிந்த ராஜபக்‌ஷவோ அல்லது வேறு எந்தவொரு தனிநபருக்குமோ உரித்தானது கிடையாது என்றார். 

அதேநேரம், சுதந்திரக் கட்சியில் உள்ள சிலர் மீது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்ற 'லேபல்' ஒட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் கட்சியை சீர்குலைப்பதற்கான சதியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

கட்சிமீது சேறுபூசும் நோக்கிலேயே இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் ஐ.தே.கவுடன் இணைந்துகொள்ளவேண்டிய தேவை தமக்கு கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

(மகேஸ்வரன் பிரசாத்)

No comments:

Post a Comment