கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதோடு, தற்போது எட்டாயிரம் ஏக்கர் அடி நீர் மாத்திரமே காணப்படுவதாக கந்தளாய் நீர்த்தேக்கத்தின் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (04) கருத்து தெரிவிக்கும்போதே,அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கந்தளாய் நீர்த்தேக்க திட்டமானது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாரிய நீர்த்தேக்க திட்டமாகும் என்பதோடு, இந்நீர்த்தேக்க திட்டத்தில் ஒரு இலட்சத்து பதினாறு அடி நீரை சேமித்து வைக்க முடியும். இதன் மூலமாக 22 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற்செய்கை செய்ய முடியும்.
ஆனால் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு பெரும்போக நெற் செய்கையின் பின்பு கந்தளாய் நீர்த்தேக்கத்தில் 78,125 ஏக்கர் அடி நீர் தான் மீதமாக இருந்தது. இந்நீரைக் கொண்டு நீர்ப்பாசன திணைக்களத்தினால் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளில்தான் வேளாண்மை செய்கை மேற்கொள்ள முடியும். ஆனால் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க கந்தளாய் பகுதியிலுள்ள 22 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது
அவ்வாறு செய்கை பண்ணப்பட்டதால்தான் தற்போது கந்தளாய் நீர்த்தேக்கத்தில் வழமைக்கு மாறாக குறைந்தளவான நீர் காணப்படுகின்றது. எட்டாயிரம் ஏக்கர் அடி நீர் தான் நீர்த்தேக்கத்தில் காணப்படுகின்றது. இதற்கு காரணம் நீர்ப்பாசன அதிகாரிகள் பரிந்துரைத்த ஏக்கர் அளவுக்கு மேலதிகமாக விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் முடிவெடுத்தமைதான் முக்கிய காரணமாகும் என்றார்.
(கந்தளாய் நிருபர் - எப்.முபாரக்)
No comments:
Post a Comment